தமிழகத்தில் அதிகரித்து வரும் வெப்பநிலை- மதுரையில் 4-வது நாளாக 100 டிகிரி வெயில் பதிவு

தமிழகத்தில் அதிகரித்து வரும் வெப்பநிலை- மதுரையில் 4-வது நாளாக 100 டிகிரி வெயில் பதிவு
Updated on
1 min read

தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் வெயில் அதிகரித்து வரும் நிலையில், மதுரையில் 4-வது நாளாக 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் பதிவாகியுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:

வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் இருந்து தமிழகம் நோக்கி வீசும் ஈரப்பதம் மிகுந்த காற்று வலுவாக இல்லை. அதனால் அவை உள் மாவட்டங்கள் வரை செல்லவில்லை. பிளவு ஏற்பட்டு திசை மாறி வீசி வருகின்றன. அதன் காரணமாக உள் மாவட்டங்களில் வெப்பநிலை உயர்ந்துள்ளது. மதுரையில் 4-வது நாளாக நேற்றும் 100 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.

வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிவரை பதிவான வெயில் அளவுகளின்படி அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 101 டிகிரி, மதுரை தெற்கில் 100 டிகிரி, சேலத்தில் 99 டிகிரி, திருச்சி, மதுரை விமான நிலையம் ஆகிய இடங்களில் தலா 98 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் இந்த ஆண்டு கோடையில் முதல் முறையாக மதுரை தெற்கில் மார்ச் 3-ம் தேதி 100 டிகிரி வெயில் பதிவானது. மதுரை விமான நிலையத்தில் 4-ம் தேதி 101 டிகிரி, 5-ம் தேதி 100 டிகிரி பதிவானது. மதுரை தெற்கில் நேற்று 100 டிகிரி வெயில் பதிவானது. மதுரையில் தொடர்ந்து 4-வது நாளாக 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த சில தினங்களுக்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுங்கல்லில் 1 செமீ மழை பதிவாகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in