

எஸ். முஹம்மது ராஃபி
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் இந்திய - இலங்கை பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.
ராமேசுவரத்தில் இருந்து 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவில் இருந்து 8 கடல் மைல் தொலைவிலும் பாக் ஜலசந்தி கடலில் 285 ஏக்கர் பரப்பில் கச்சத்தீவு அமைந்துள்ளது. ராமேசுவரத்தில் இருந்து சுமார் 2 மணி நேரத்திலும், நெடுந்தீவு மற்றும் தலைமன்னாரில் இருந்து சுமார் ஒன்றரை மணி நேரத்திலும் படகு மூலம் கச்சத்தீவை சென்றடையலாம்.
புயல், சூறாவளி, இயற்கைச் சீற்றங்களில் இருந்து தங்களைக் காப்பாற்றவும், அதிக அளவில்மீன்கள் கிடைக்கவும் மீனவர்கள்வழிபாடு நடத்திய பிறகே கடலுக்குச் செல்வது வழக்கம். 1913-ம்ஆண்டில் ராமேசுவரம் ஓலைக்குடாவைச் சேர்ந்த அந்தோணிப்பிள்ளை பட்டங்கட்டி, தொண்டியைச் சேர்ந்த சீனிக்குப்பன் பட்டங்கட்டி ஆகியோரால் கச்சத்தீவில் சிறிய ஓலைக் குடிசையில் புனித அந்தோணியார் ஆலயம் நிறுவப்பட்டது. அதன் பிறகு ஆண்டுதோறும் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் அந்தோணியார் ஆலயத் திருவிழா நடைபெற்று வருகிறது.
இத்திருவிழா நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு மேல் கச்சத்தீவில் தொடங்கியது. யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத்தில் கொடியை ஏற்றி வைத்து திருவிழாவை தொடங்கி வைத்தார். காலி மறைமாவட்ட ஆயர் ரேமண்ட் விக்ரமசிங்கே, நெடுந்தீவு பங்குத் தந்தை எமில் பவுல், ராமேசுவரம் பங்குத் தந்தை தேவசகாயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இந்திய பக்தர்கள் ஏராளமானோர் நேற்று அதிகாலை முதல் குவிந்தனர். இவர்களை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் தலைமையில் வருவாய், காவல்துறை அதிகாரிகள், சுங்க இலாகாவினர் சோதனை செய்தனர்.
74 விசைப் படகுகள்
உணவுப் பண்டங்கள், சிறிதளவு பணம் உள்ளிட்டவற்றை கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர். மது, சிகரெட், போதைப் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டது. 74 விசைப்படகுகள் மற்றும் 24 நாட்டுப் படகுகளில் 2.028 ஆண்கள், 450 பெண்கள், 92 குழந்தைகள் என 2,570 பயணிகள் கச்சத்தீவு சென்றனர். கச்சத்தீவு செல்பவர்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் மூலம் சிறப்பு அடையாள அட்டைகள், மீன்வளத் துறை சார்பாக பாதுகாப்பு கருதி ஒவ்வொருவருக்கும் ‘‘லைப் ஜாக்கெட்’’ வழங்கப்பட்டுள்ளன.
கச்சத்தீவு செல்லும் வழியில் இந்திய கடற்படையைச் சேர்ந்த 2 ஹெலிகாப்டர்கள், கடலோரக் காவல் படையைச் சேர்ந்த 3 படகுகள், 2 ஹோவர்கிராப்ட் கப்பல் ஆகியவை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டன.
கச்சத்தீவில் உணவு, குடிநீர், மின்சாரம், மருத்துவ வசதிகள், தற்காலிக படகுத் துறைகள், பாதைகள் ஆகியவற்றை இலங்கை கடற்படையினர் செய்துள்ளனர்.
சிறப்பு திருப்பலி
திருவிழாவின் 2-வது நாளான இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு இந்திய-இலங்கை மீனவர்கள் பிரச்சினைகள் இன்றி மீன் பிடிக்கவும், இரு நாட்டு மக்களும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டியும் சிறப்புத் திருப்பலி நடக்கிறது. காலை 9 மணிக்கு திருப்பலி முடிந்த பிறகு கொடியிறக்கப்பட்டு திருவிழா நிறைவடைகிறது.