Published : 07 Mar 2020 03:43 AM
Last Updated : 07 Mar 2020 03:43 AM

9 முறை எம்எல்ஏ, 80 ஆண்டுகால பொதுவாழ்க்கை, 43 ஆண்டு காலம் பொதுச்செயலாளர்: அன்பழகன் வாழ்க்கை வரலாறு

திமுக பொதுச்செயலாளர், கருணாநிதியின் உற்ற நண்பர், முதுபெரும் திராவிட இயக்கத் தலைவர் க.அன்பழகன் இன்று மறைந்தார். அவரது நீண்ட நெடிய பொதுவாழ்வு குறித்த சிறு குறிப்பு.

திமுக தலைவர் கருணாநிதியின் உற்ற தோழரான அன்பழகன் பிறந்ததும் கருணாநிதி பிறந்ததும் ஒரே மாவட்டம்தான். திருவாரூர் திருக்குவளையில் கருணாநிதியும், காட்டூரில் அன்பழகனும் பிறந்தனர். கருணாநிதியைவிட 2 வயது மூத்தவர் அன்பழகன். எனக்கு அண்ணன் இல்லை அதனால் அன்பழகனை என் அண்ணனாகப் பார்க்கின்றேன் என்றார் கருணாநிதி.

1922 ஆம் ஆண்டு, டிசம்பர் 19-ம் தேதி அன்று திருவாரூர் மாவட்டத்திலுள்ள காட்டூர் கிராமத்தில், எம். கல்யாணசுந்தரனார்-சுவர்ணம்பாள் தம்பதிக்கு மூத்த மகனாகப் பிறந்தார் அன்பழகன்.அவரது இயற்பெயர் ராமையா . பின்னாளில் தமிழ் மீது கொண்ட பற்றால் தன் பெயரை அன்பழகன் என மாற்றிக்கொண்டார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. (ஹனர்ஸ்) தமிழ் படித்தார். படிக்கும்போதே அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் திராவிட இயக்கக் கூட்டங்களை நடத்துவது, கூட்டங்களில் பங்கேற்பது போன்றவற்றில் ஆர்வம் காட்டினார்.

படிப்பை முடித்தபின் 1944-ம் ஆண்டு முதல் 1957-ம் ஆண்டு வரை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றினார். பச்சையப்பன் கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றும்போதே 1957-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு எழும்பூர் தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.

1957-ல் எழும்பூர் தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.

1962-ல் மீண்டும் எழும்பூரில் போட்டியிட்டவர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி வெங்கடாச்சலத்திடம் தோல்வி அடைந்தார்.

1962-ல் தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராக 1962 ஆண்டில் சென்னை-செங்கற்பட்டு ஆசிரியர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1967-ம் ஆண்டு முதல் 1971-ம் ஆண்டு வரை திருச்செங்கோடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தார் .

1971 - சட்டப்பேரவை தேர்தலில் புரசைவாக்கம் தொகுதியில் வென்று திமுக அமைச்சரவையில் சமூகநலத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.

1977-ல் புரசை சட்டப்பேரவை உறுப்பினர்.

1980-ல் புரசை சட்டப்பேரவை உறுப்பினர். 1983-ல் இலங்கை தமிழ் மக்களின் ஈழக் கோரிக்கையை வலியுறுத்தி திமுக தலைவர் கருணாநிதியுடன் சேர்ந்து தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

1984-ம் ஆண்டு பூங்கா நகர் தொகுதியில் வென்றார்.

1989-ல் அண்ணா நகரில் நின்று வென்றார். அப்போது கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

1991- ல் சேப்பாக்கத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

1996-ல் துறைமுகத்தில் போட்டியிட்டு வென்று கல்வி அமைச்சராகப் பணியாற்றினார்.

2001-ல் மீண்டும் துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.

2006- ல் மீண்டும் துறைமுகம் தொகுதியில் வென்றார். இம்முறை திமுக அரசில் நிதி அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.

2011-ம் ஆண்டு வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

2016- சட்டப்பேரவைத் தேர்தலில் வயோதிகம் காரணமாகப் போட்டியிடவில்லை.

”தமிழர் இனம்” குறித்தும் அவர்கள் வாழ்கின்ற நிலை குறித்தும், சுயமரியாதை குறித்தும் தன் பேச்சுகளில் அதிகம் குறிப்பிட்டு வலியுறுத்தி வந்ததால் இனமானப் பேராசிரியர் என்று அன்புடன் அவர் கட்சித் தொண்டர்களாலும், மக்களாலும் அழைக்கப்பட்டார். 1977-ம் ஆண்டு முதல் 43 ஆண்டு காலம் திமுகவின் பொதுச்செயலாளராக மிக நீண்டகாலமாக கட்சிப் பணியாற்றி வந்தார்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு மிக நெருக்கமான நண்பர். ஸ்டாலின் அவரை எப்போதும் பெரியப்பா என்றுதான் அழைப்பார். ஸ்டாலின், தனது தந்தைக்கு அடுத்து மிகவும் மதிக்கக்கூடிய தலைவர் அன்பழகன். தந்தையிடம் குறிப்பிட முடியாத விஷயங்களை பெரியப்பா அன்பழகன் மூலம் தந்தையிடம் கொண்டு செல்வார் என்று கூறுவார்கள்.

திமுகவின் சோதனையான காலக்கட்டம் என்றால் 1975-ம் ஆண்டு காலகட்டம் எனலாம். அப்போது திமுக தலைவர் கருணாநிதியை ஒதுக்கிவிட்டுப் பலரும் விலகிச் சென்ற நேரத்திலும் விலகாது உடனிருந்தவர் அன்பழகன். அதனால்தான் அவர் இறுதி வரை திமுகவில் கருணாநிதிக்கு அடுத்த இடத்தில் மதிப்புடன் வைக்கப்பட்டார்.

“நான் கழகத்தின் தலைவர். அவர் பொதுச்செயலாளர்! இருவரும் கலந்தே முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும் என்று கழக சட்டதிட்டம். எங்களுக்கு விதிமுறைகளை வகுத்துக் கொடுத்து இருந்தாலும் நாங்கள் இருவரும் சேர்ந்து முக்கியமான முடிவுகளை எடுத்திட தலைமை நிர்வாகக் குழுவையோ, செயற்குழு, பொதுக்குழுக்களையோதான் கூட்டுகிறோம்.

எங்கள் உறவை வெட்டி முறித்திடக் கூட வீணர்கள் எண்ணினார்கள். ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் நாங்கள் என்பதை எங்கள் சகோதரப் பாசத்தின் வாயிலாக வெளிப்படுத்துவது மட்டுமல்ல, தமிழ் இனமும் நாடும் வாழ இந்தக் கழகம் வாழவேண்டும் என்று நாங்கள் வாழும் வரையிலும் இணைந்து நின்றே லட்சியப் பயணம் வகுத்திடுவோம்!”

இது 1981-ம் ஆண்டு அன்பழகன் பிறந்த நாளில் வெளியிடப்பட்ட மலரில் கருணாநிதி எழுதியது. மனதில் பட்டதை பட்டென சொல்லக்கூடியவர், அவரது மனதுக்குப் பட்டதைச் செய்யக்கூடியவர். அதனால்தான் திமுகவில் அவரது கருத்துக்குத் தனி மரியாதையும், தமக்கு அடுத்த இடத்தையும் கருணாநிதி வழங்கியிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x