தென்காசியில் மாற்றுத் திறனாளிகளுக்கான முதல் சிறப்பு குறைதீர் கூட்டம்: 221 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு முதல் முறையாக சிறப்பு குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. தென்காசி ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள சுப்பராஜா திருமண மண்டபத்தில் நடைபெற்ற முகாமுக்கு, ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, மூன்றுசக்கர வண்டி, சக்கர நாற்காலி, காதொலி கருவி, செயற்கைக் கால், செயற்கைக் கை, இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர், கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மாற்றுத்திறனாளிகள் மனுக்களை அளித்தனர். அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.
நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 180 பேருக்கு ரூ.32 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் பராமரிப்பு உதவித்தொகை, 14 பேருக்கு ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் வங்கி கடன் மான்யம், மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் மூலம் 27 பேரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சத்து 41 ஆயிரம் இறுதிச்சடங்கு உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கல்பனா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மரகதநாதன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாந்திகுளோரி எமரால்ட், ஆவின் உதவி இயக்குநர் அனுஷாசிங், தென்காசி வருவாய் கோட்டாட்சியர் பழனிக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
காவலரின் மனிதநேயம்:
சக்கர நாற்காலியில் வந்த மாற்றுத் திறனாளிகள் சாய்வு பாதை இல்லாதால் குறைதீர் கூட்டம் நடந்த மண்டபத்துக்குள் செல்ல முடியாமல் தவித்தனர்.
இந்நிலையில், பாதுகாப்புப் பணிக்காக வந்திருந்த மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்புக் காவல் படை பட்டாலியன் போலீஸ்காரர் ஆண்ட்ரூஸ் செல்வம், சக்கர நாற்காலியில் அமர்ந்து வந்த மாற்றுத்திறனாளிகளை மண்டபத்துக்குள் அழைத்துச் சென்று மனு அளிக்க உதவினார்.
மனு அளித்த பின்னர் அவர்களை பாதுகாப்பாக மண்டபத்துக்கு வெளியே அழைத்துச் சென்றார். சக்கர நாற்காலியில் அமர்ந்து மனு அளிக்க வந்தவர்களை ஒவ்வொருவராக தேடிச் சென்று, உதவியது மாற்றுத்திறனாளிகளை நெகிழச் செய்தது. காவலருக்கு அவர்கள் நன்றி கூறிச் சென்றனர்.
