

சென்னை தேனாம்பேட்டையில் 3-ம் தேதி மாலை நடந்த நாட்டு வெடிகுண்டு தாக்குதலில் தப்பித்த காக்காத்தோப்பு பாலாஜி, சிடி மணியின் வழக்கறிஞர் தங்களை ஒரு கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுட்டும் விரட்டியதாக புகார் அளித்துள்ளார்.
கடந்த 3-ம் தேதி மாலை தேனாம்பேட்டை ஜெமினி பாலம் அருகே கார்மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. பின்னர் அனைவரும் தப்பிச் சென்றனர். இந்தச்சம்பபவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது. காரில் வந்தவர்கள் பிரபல தாதாக்கள் காக்காத்தோப்பு பாலாஜி, சிடி மணி என்பதும், காரை 8 மோட்டார் பைக்குகளில் கும்பல் துரத்தியது என்றும் போலீஸார் கைப்பற்றிய சிசிடிவி காட்சியில் வெளியானது.
மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை அனுப்பியது பிரபல தென் மாவட்ட தாதா சம்போ செந்தில் என தெரிய வந்தது. மாங்கா செந்தில், கமருதீன் உள்ளிட்டவர்கள் ஏற்பாட்டின்பேரில் இவர்கள் கும்பலாக வந்துள்ளது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் மதுரை கோர்ட்டிலும், 3 பேர் சிவகாசி கோர்ட்டிலும் சரணடைந்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து காரை ஓட்டிய தங்கராஜ் என்கிற வழக்கறிஞர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரில், “ சிடி மணியின் வழக்கறிஞரான நான் ஒரு வழக்குக்காக எனது கிளையண்ட் சிடி மணியுடன் சென்னை செசன்ஸ் கோர்ட்டுக்கு சென்றேன். அங்கிருந்து சிடி மணியின் காரில் 3 மணிக்கு சைதாப்பேட்டைக்கு புறப்பட்டோம்.
அப்போது மணியின் நண்பர் காக்காத்தோப்பு பாலாஜி கிண்டியில் இறக்கி விடச்சொன்னதன் பேரில் அவரையும் ஏற்றிக்கொண்டு கிண்டி நோக்கி சென்றோம். காரை நான் ஓட்டிச் சென்றேன். ஸ்பென்சர் அருகே வரும்போது சில மோட்டார் சைக்கிள்கள் எங்கள் காரை துரத்துவதை அறிந்தோம். அவர்கள் சம்போ செந்தில், நெப்போலியன், பாண்டிச்சேரில் பிரச்சனாவின் கூட்டாளிகள் என்றுச் சொன்னார்.
அவர்கள் எங்களைக் கொல்ல வருகிறார்கள் என்பதை அறிந்து காரை வேகமாக ஓட்டிச் சென்றோம். அப்போது அவர்கள் எங்கள்மீது நாட்டு வெடிகுண்டை வீசினார்கள். அவர்களிடமிருந்து தப்பித்து தேனாம்பேட்டை ஸ்டேஷனில் உயைரைக்காப்பாற்றிக்கொல்ல அடைக்கலம் தேட காரில் வேகமாகச் சென்றோம்.
அண்ணா அறிவாலயம் சென்று திரும்புவதற்குள் தாக்கிவிடுவார்கள் என நினைத்து ஜெமினி பாலத்தின்கீழ் எதிர்பாதையில் வேகமாக ஸ்டேஷனை நோக்கி காரை ஓட்டினோம். அப்போது இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் கார்மீது வீசப்பட்டது.
இதனால் காரை ஜி.என்.செட்டி சாலை லிங்க் சாலை வழியாக திருப்பி வேகமாக ஓட்டிச் சென்றோம். அப்போது 4 மோட்டார் சைக்கிளில் பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் எங்களை துப்பாக்கியால் சுட்டப்படி விரட்டியது. ஒருவழியாக ஆலையம்மன் கோயில் வரை வந்தப்பின்னர் அவர்களிடமிருந்து தப்பித்தோம்.
இந்தப் புகாரைப் பெற்று உரிய விசாரணை நடத்தி என்னை கொல்ல வந்தவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும், எனக்கும் என் குடும்பத்தாருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்”.
இவ்வாறு தங்கராஜ் கூறியுள்ளார்.