

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இஸ்லாமியர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக இன்று 1110 அடி நீளமுள்ள தேசியக் கொடியை ஏந்தியபடி பேரணி மேற்கொண்டனர். கட்டபொம்மன் சிலை அருகே தொடங்கிய இப் பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேருந்து நிலையம் அருகே உள்ள தேவர் சிலையை சென்றடைந்து மீண்டும் கட்டபொம்மன் சிலை அருகே முடிவுற்றது.
இதில் குடியுரிமைச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. பேரணி முடிவில் இஸ்லாமியர்கள் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தின் படி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பெளத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும். ஆனால், முஸ்லிம்களுக்கு இந்தச் சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.
இதன் காரணமாகவே முஸ்லிம்கள் நாடு முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.