ரூ.89 கோடி மதிப்பீட்டில் தேனி அரசு சட்டக்கல்லூரிக்கு நவீன வசதிகளுடன் கட்டிட வசதி: காணொலி காட்சி மூலம் முதல்வர் தொடங்கி வைத்தார்
தமிழக முதல்வர் பழனிசாமி தேனி அரசு சட்டக்கல்லூரியில் ரூ.89 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்காக காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
ஆண்டுதோறும் சட்டக்கல்லூரி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் பின்தங்கிய மாணவர்கள் குறைந்தசெலவில் சட்டக்கல்வியினை வழங்க புதியதாக 3 அரசுக் கல்லூரி தொடங்கப்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்திருந்தார்.
இதன்படி சேலம், நாமக்கல், தேனியில் இக்கல்லூரி தொடங்கப்பட்டது. தேனியைப் பொறுத்தளவில் ஸ்ரீசந்திரகுப்த மெளரியா தனியார் பள்ளியில் அரசு சட்டக்கல்லூரி 29.8.2019ல் தொடங்கப்பட்டது.
அரசு சட்டக்கல்லூரிக்கு நிரந்தரக் கட்டிடம் கட்டும் வகையில் தேனி அருகே தப்புக்குண்டு கிராமத்தில் ரூ.89 கோடி மதிப்பீட்டில் கல்லூரி கட்டிடம், விடுதி உள்ளிட்டவை கட்டப்பட உள்ளது. இதற்காக முதல்வர் பழனிசாமி காணொலிகாட்சி மூலம் நேற்று அடிக்கல் நாட்டினார்.
இதில் இரண்டு தளங்களுடன் 26 வகுப்பறைகள், 400 மாணவர்கள் பங்கு பெறும் வகையில் கருத்தரங்கக் கூடம், காணொலிக்காட்சி அறை, சொற்பொழிவு அறை, ஓய்வு அறைகள், கணினி ஆய்வகம், உள் விளையாட்டரங்கம், சர்வதேச தர மாதிரி நீதிமன்ற அரங்கம், அதிவேக இணையவசதிகளுடன் நூலகக் கட்டடம், கலையங்கம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட உள்ளது.
நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் க.சண்முகம், சட்டத்துறை செயலாளர் ச.கோபிரவிகுமார், சட்டக்கல்வி இயக்கநர் நா.சு.சந்தோஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
