

மாநிலக்கல்லூரி மாணவரை தலையில் வெட்டி அவரது மோட்டார் சைக்கிளை பறித்துச் சென்ற பச்சையப்பன் கல்லூரி மாணவர் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை திருமங்கலத்தில் வசிப்பவர் நேரு(19), மாநிலக்கல்லூரியில் பிஏ மூன்றாமாண்டு படித்து வருகிறார். கல்லூரி முடிந்து இன்று மதியம் தனது வீட்டிற்கு சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலை வழியாக தனது டியோ பைக்கில் சென்றார். அப்போது நெல்சன் மாணிக்கம் சாலை பேருந்து நிலையத்தில் தனது நண்பர் பாலச்சந்தரைப்பார்த்துள்ளார்.
அவருடன் பேருந்து நிலையத்தில் நின்று பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த 12 மாணவர்கள் நேருவை வழிமறித்து நீ பிரசிடென்சி கல்லூரியில் படிக்கிறவன் தானே என்று ஐடி கார்டை பிடுங்கி, கத்தியால் நேருவின் தலையில் பின்பக்க மண்டையில் மூன்று வெட்டும், நடுமண்டையில் இரண்டு வெட்டும் வெட்டி விட்டு நேருவிடம் இருந்த டியோ பைக்கை பறித்துச் சென்று விட்டனர்.
உடனே அருகில் இருந்தவர்கள் போலீஸுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் ஆனந்த்பாபு பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை மடக்கிப்பிடித்து அவர்களிடமிருந்த 2 1/2 அடி நீள கத்தியை கைபற்றினார்.
நேருவை கத்தியால் வெட்டியதாக பச்சையப்பன் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பிஎஸ்சி படிக்கும் அம்பத்தூர், அன்னை சத்யாநகரைச் சேர்ந்த மாணவர் கார்த்திக்(20) உள்ளிட்ட 11 பேரை போலீஸார் கைது செய்தனர்.