Published : 06 Mar 2020 08:19 PM
Last Updated : 06 Mar 2020 08:19 PM

அமைச்சர் ஜெயக்குமார்போல் தொலைபேசியில் பேசி பணம் கேட்டு மிரட்டல்: மோசடி நபர் கைது

அமைச்சர் ஜெயக்குமார்போல் தொலைபேசியில் பேசி மிரட்டி பணம் கேட்ட நபரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை, கிண்டி, தொழிற்பேட்டையிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாண்மை இயக்குநராக பணியாற்றுபவர் துரைசாமி (61), கடந்த 03-ம் தேதி அன்று காலை வழக்கம்போல் அலுவலகம் வந்த அவர் பணியிலிருந்தார்.

அப்போது, அவரது அலுவலக தொலைபேசிக்கு போன் ஒன்று வந்தது. மறுமுனையில் பேசிய நபர் தான் அமைச்சர் ஜெயக்குமார் என்றும் விரைவில் நடக்க உள்ள நிகழ்ச்சி ஒன்றிற்காக பணம் தேவைப்படுவதால், பணம் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார். நீங்கள் பேசுவது எனக்கு புரியவில்லை, என்னை எப்படி உங்களுக்கு தெரியும் நீங்கள் அமைச்சர்தானா? என்று துரைசாமி கேட்டுள்ளார்.

அதற்கு எதிர்முனையில் பேசியவர் நான் அமைச்சர் என்பதில் சந்தேகமா? என், பவர் தெரியுமா? என மிரட்டியுள்ளார். அவரிடம் பணிவாக பேசி போனை வைத்துவிட்ட துரைசாமி, எதிமுனையில் பேசியவர் குறித்து சந்தேகமடைந்தால் இது குறித்து கிண்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தினர்.

போலீஸ் விசாரணையில் அமைச்சர் ஜெயக்குமார்போல் பேசி மிரட்டிய போலி நபர் குறித்து தெரியவந்தது. உடனடியாக அந்த நபரை கைது செய்த போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அமைச்சரின் பெயரை பயன்படுத்தி பணம் கேட்டு மிரட்டியவர் எம்கேபி நகர் 17வது கிழக்கு குறுக்குத்தெருவைச் சேர்ந்த முகமது ரபீக் (50), என தெரியவந்தது.

முகமது ரபீக் அமைச்சர் போல தொலைபேசியில் பேசி மிரட்டல் விடுத்தது கிண்டி துரைசாமியிடம் மட்டுமல்ல இது போல பணம் கேட்டு மிரட்டியது தொடர்பாக முகமது ரபீக் மீது கோயம்புத்தூர் உட்பட தமிழகம் முழுவதும் சுமார் 15 முறை கைதாகியுள்ளதும், அதிலும் 2 முறை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதும் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட முகமது ரபீக் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x