சட்டப்பேரவையில் அப்துல் கலாம் பற்றி பேச வாய்ப்பளிக்கவில்லை: மு.க.ஸ்டாலின் வருத்தம்

சட்டப்பேரவையில் அப்துல் கலாம் பற்றி பேச வாய்ப்பளிக்கவில்லை: மு.க.ஸ்டாலின் வருத்தம்
Updated on
1 min read

சட்டப்பேரவையில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மறைவுக்கான இரங்கல் தீர்மானத்தின் மீது பேச வாய்ப்பு அளிக்காதது வருத்தமளிப்பதாக திமுக பொருளாளரும், அக்கட்சியின் சட்டப்பேரவை குழுத் தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறும்போது, சட்டப்பேரவை கூட்டத் தொடரின் முதல் நாளில் அப்துல் கலாம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்துல் கலாம் நாடு முழுவதும் மக்களின் அன்பை பெற்ற மாபெரும் தலைவர். எனவே, அவரது மறைவுக்கான இரங்கல் தீர்மானத்தின் மீது பேச கட்சிகளின் தலைவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்த்தோம்.

ஆனால், பேரவைத் தலைவர் பி.தனபால் இரங்கல் குறிப்பை வாசித்ததும் யாருக்கும் பேச வாய்ப்பு தராமல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது வருத்தம் அளிக்கிறது. பேரவை கூடியதும் நிகழ்ச்சி நிரல்படி இரங்கல் தீர்மானம் கொண்டு வராமல், முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு தெரிவித்து பேரவைத் தலைவர் பேசுகிறார். இந்த மரபு மீறலை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கைதட்டி வரவேற்கிறார்கள்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்காக முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டுவதில் எங்களுக்கு ஆட்சேபம் இல்லை. ஆனால், அதை வேறொரு நாளில் வைத்துக் கொண்டு அப்துல் கலாம் பற்றி பேச அனுமதித்திருக்கலாம்.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in