உசிலம்பட்டி அருகே பெண் சிசுக் கொலை: தமிழகத்தின் பண்பாட்டுப் பெருமைக்கு அவமானம்; ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்
மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்
Updated on
1 min read

மதுரை மாவட்டத்தில் பெண் சிசுக் கொலையை நிகழ்த்தியவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

உசிலம்பட்டி செக்காணூரணி வைர முருகன்-சவுமியா தம்பதி தங்களது 2-வது பெண் குழந்தையை உறவினர்களுடன் சேர்ந்து சிசுக் கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. அக்குழந்தைக்கு கள்ளிப்பால் கொடுத்துக் கொன்றனரா அல்லது கழுத்தை நெரித்துக் கொலை செய்தனரா என்பது குறித்து போலீஸார், பெற்றோர் உட்பட மூவரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

விசாரணையில் வைரமுருகன், சவுமியா கள்ளிப்பால் கொடுத்து பெண் சிசுவைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதன் அடிப்படையில் வைரமுருகன், சவுமியா மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 6) தன் முகநூல் பக்கத்தில், "பெண்மையைப் போற்றும் தமிழகத்தின் பண்பாட்டுப் பெருமைக்கு அவமானமாக மீண்டும் பெண் சிசுக் கொலை தலைதூக்குவது வேதனையளிக்கிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி செக்காணூரணி அருகே புள்ளநேரி கிராமத்தில் இரண்டாவதாகப் பிறந்த பெண் குழந்தையைப் பெற்றோரே கள்ளிப்பால் ஊற்றிக் கொன்று புதைத்திருப்பது இதயம் உள்ளோர் அனைவரையும் பதற வைக்கிறது.

கண்டனத்திற்குரிய இந்தச் செயலில் ஈடுபட்டோர், துணை நின்றோர் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். பொள்ளாச்சியில் இளம்பெண்கள் மீதான பாலியல் வன்முறை, உசிலம்பட்டி அருகே பெண் சிசுக் கொலை எனத் தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற மாநிலமாகி வரும் நிலையில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் கொண்டாடும் ஆட்சியாளர்கள் வெறும் ஏட்டளவில் இல்லாமல் நடைமுறையில் பெண் சிசுக்களைப் பாதுகாத்திட வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in