கரோனாவைக் கருத்தில் கொண்டு சிஏஏவைத் திரும்பப் பெறுக: சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள்

கரோனாவைக் கருத்தில் கொண்டு சிஏஏவைத் திரும்பப் பெறுக: சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள்
Updated on
1 min read

கோவிட்- 19 பரவலைக் கருத்தில் கொண்டு, நாட்டு நலன் கருதி உடனடியாக குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் இன்று விடுத்துள்ள அறிக்கை:

“நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், உலகின் பல நாடுகளிலும் கோவிட் -19 நோய் பரவி வருகிறது. இது மக்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவிட் -19 நோயைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் உலக நாடுகள் முனைப்புடன் ஈடுபட்டுள்ளன.

மக்கள் நெருக்கமாக கூடுவது தவிர்க்கப்பட வேண்டும் என சர்வதேச பொது சுகாதாரத்துறை நிபுணர்களும், உலக நல நிறுவன நிபுணர்களும் அறிவுறுத்தியுள்ளனர். இதைக் கவனத்தில் கொண்டு, நாடு முழுவதும் பொதுமக்களை, பெரும் எண்ணிக்கையில், அச்ச உணர்வுடன் ஒன்று திரண்டு போராட வைத்துள்ள, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். கோவிட் -19 தடுப்பைவிட, பிற நாடுகளில் இருந்து குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்கும் பிரச்சினை, அவசரமான அதிமுக்கியப் பிரச்சினையல்ல.

நமது மக்களின் உடல் நலனையும், உயிரையும், பொருளாதாரத்தையும் காப்பதுதான் மிக முக்கிய தலையாயப் பிரச்சினை. கோவிட் -19 தடுப்பிற்கு, நாட்டில் அமைதியான சூழலையும், பாதுகாப்பு உணர்வையும், நம்பிக்கையையும் அனைத்துப் பகுதி மக்களிடமும் ஏற்படுத்த வேண்டும்.

அனைத்துக் குடிமக்களையும் கோவிட் -19 தடுப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும். அந்தப் பொறுப்பும் கடமையும் மத்திய அரசுக்கு உள்ளது. எனவே, அதை உணர்ந்து, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்”.

இவ்வாறு ஜி.ஆர்.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in