7 எம்.பி.க்கள் இடைநீக்கம் துரதிர்ஷ்டவசமானது: ஸ்டாலின் 

7 எம்.பி.க்கள் இடைநீக்கம் துரதிர்ஷ்டவசமானது: ஸ்டாலின் 
Updated on
1 min read

நாடாளுமன்றத்தில் 7 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது துரதிர்ஷ்டவசமானது என்று திமுக தலைவர் ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

டெல்லி கலவரம் தொடர்பான அமளியால் நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடங்கியுள்ளது. அங்கு கடந்த மூன்று நாட்களாக அமளி ஏற்பட்டு வருகிறது. இது தொடர்பான விவாதம் கடந்த மாதம் நடந்த நிலையில், தற்போது மீண்டும் அவை கூடியுள்ளது.

ஏப்ரல் 3-ம் தேதி வரை அவை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தொடரின் தொடக்கத்தில் இருந்தே டெல்லி கலவரம் தொடர்பான விவாதத்தால் அவை ஒத்திவைக்கப்பட்டது.

டெல்லியில் கலவரம் தொடர்பாக விசாரணை நடத்தவேண்டும். லோக்சபாவில் கலவரம் பற்றி விவாதம் செய்ய வேண்டும், உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, எம்.பி.க்கள் யாரும் அவைக்கு முன் வந்து கோஷமிடக்கூடாது, அமளி செய்யக்கூடாது. அப்படிச் செய்தால் அந்த எம்.பி.க்கள் இந்தக் கூட்டத்தொடர் முழுக்க சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்று எச்சரித்தார். ஆனால் நேற்றும் டெல்லி கலவரம் தொடர்பாக திமுக, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுப்பட்டனர்.

அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக் தாகூர், பிரதாபன், கவுரவ் கோகோய், டீன் குரியகோஸ், ராஜ்மோகன் உன்னிதன், பென்னி பெஹ்னான், குர்ஜித் சிங் ஆஜ்லா ஆகிய 7 எம்.பி.க்களும் நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடர் முழுவதும் பங்கேற்கத் தடை விதித்து சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.

7 எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்ததைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். 7 எம்.பி.க்கள் சஸ்பெண்டை ரத்து செய்ய காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில், ''நாடாளுமன்ற மக்களவையில் டெல்லி வன்முறை குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்திய காங்கிரஸ் எம்.பி.க்கள் 7 பேர் மக்களவைத் தலைவரால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது தவறான நடவடிக்கையாகும்.

நாடாளுமன்றம் என்பது, ஜனநாயகத்தின் கோயில் என்பதை பாஜக அரசு நினைவில் கொண்டு செயல்பட வேண்டும். இந்த இடைநீக்க உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என மக்களவைத் தலைவரைக் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in