

திருப்பூர் செல்லாண்டித்துறை அறிவொளி சாலையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக குடியுரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பில் கடந்த 20 நாட்களாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திருப்பூரைச் சேர்ந்த வக்கீல் கோபிநாத் என்பவர் சாலையில் அமர்ந்து போராடுவதால் பொதுமக்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது என்று ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கின் அடிப்படையில் சென்னை ஐகோர்ட்டு நேற்று உத்தரவு பிறப்பித்தது. அதில்அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபடுவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
எங்களை கைது செய்தாலும் நாங்கள் தொடர்ந்து போராடுவோம். எங்களை திருமண மண்டபத்தில் அடைக்காமல் சிறையில் அடைக்க வேண்டும். விடுதலை ஆனாலும் மீண்டும் போராட்டத்தை தொடருவோம் என்று போராட்டக்காரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் போலீஸ் உதவி ஆணையர் பத்ரிநாராயணன் தலைமையில், திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் போராட்டக்காரர்களுடன் பேச்சு வார்த்தை நடந்தது.
போராட்டக்குழுவினர் கைது தொடர்பாக, போராட்டக்குழு சார்பில் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கைது நடவடிக்கை ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து போராட்டக்குழுவினர் தங்கள் போராட்டத்தை இன்று 21-வது நாளாக தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.