Published : 06 Mar 2020 10:31 AM
Last Updated : 06 Mar 2020 10:31 AM

புரோட்டா சாப்பிடுவதை தவிர்த்துவிட்டு பால், பழம் கடலை மிட்டாய் சாப்பிடுங்கள்- அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்கு அதிகாரி அறிவுறுத்தல்

புதுக்கோட்டை

புரோட்டா சாப்பிடுவதைத் தவிர்த்து விட்டு பால், வாழைப்பழம், கடலை மிட்டாய் போன்ற எளிதில் ஜீரனமாகும் வகையிலான உணவுகளை மட்டுமே ஓட்டுநர் கள் உண்ண வேண்டும் என அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் மண்டல மேலாண்மை இயக்குநர் ஆர்.பொன்முடி தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் அரசுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் சார்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கில் பங்கேற்ற அவர், சிறந்த ஓட்டுநர்கள் 9 பேரைப் பாராட்டிப் பேசியதாவது:

புரோட்டா சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய் பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், புரோட்டா எளிதில் ஜீரனமாகாமல், உடல் நலத்துக்கு குறைபாடு ஏற்படுத்தக்கூடியது. எனவே, புரோட்டாவுக்குப் பதிலாக எளிதில் ஜீரனமாகும் வகையிலான பால், வாழைப்பழம், கடலை மிட்டாய் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். பேருந்து ஓட்டும்போது, இதை அவசியம் கடைபிடியுங்கள்.

உணவுப் பழக்கத்தில் ஓட்டுநர் கள் அக்கறை காட்ட வேண்டும். நம் மண்ணில் விளையும் நிலக்கடலையைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் கடலை மிட்டாயின் அருமை நமக்குத் தெரியவில்லை. ஆனால், நம் நாட்டில் தயாராகி ஏற்றுமதியாகும் கடலை மிட்டாயை அமெரிக்கர்கள் விரும்பி உண்ணுகிறார்கள்.

வாய்ப்புகள் எல்லோருக்கும் கிடைக்கும். ஆனால், அந்த வாய்ப்பை யார் வசப்படுத்துகிறாரோ அவர்தான் வெற்றியாளர். புதுக்கோட்டை மாவட்டத்தில் எத்தனையோ ஓட்டுநர்கள் இருந்தும்கூட, 9 பேரை மட்டும்தான் சிறந்த ஓட்டுநர்கள் எனப் பாராட்ட முடிகிறது. முடியாதது எதுவும் கிடையாது. அனைவரும் முயற்சி செய்யுங்கள். விபத்தில்லாத சிறந்த ஓட்டுநராக முடியும். ஓட்டுநர்கள் ஒவ்வொருவரும் உடலையும், உள்ளத்தையும் நன்றாக கவனித்துக் கொண்டால் விபத்துகளைக் குறைக்க முடியும் என்றார்.

முன்னதாக புதுக்கோட்டை மண்டல பொது மேலாளர் ஆர்.இளங்கோவன் தலைமை வகித்தார். நிகழ்வில் புதுக்கோட்டை மோட்டார் வாகன ஆய்வாளர் பி.செந்தாமரை, சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத் தலைவர் க.மோகன்ராஜ், மருத்துவர் துரை.நாகரத்தினம், சமூக ஆர்வலர் அல்லி ராணி உள்ளிட்டோர் பேசினர். அரசுப் போக்குவரத்துக் கழக பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x