

கோவை மாநகரில் போக்கு வரத்துக்கு இடையூறாக வைக்கப் படும்குப்பைத் தொட்டிகளால் விபத்துஅபாயம் உள்ளது. அத் தொட்டிகளை முறையாக வைக்க வேண்டும்என மாநகராட்சிக்கு வலியுறுத்தப் பட்டுள்ளது.
மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில், பல்வேறு இடங்களில் குப்பைத்சேகரிக்க தொட்டிகள் வைக்கப்பட் டுள்ளன. 2 டன், ஒரு டன், அரை டன் என வெவ்வேறு கொள்ளளவுகளில் இந்த குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. பிரதான சாலைகள்,உட்புறச் சாலைகள், முக்கிய வீதிகளில் இத்தொட்டிகள் வைக்கப்பட் டுள்ளன. துப்புரவு பணியாளர்கள் வீடுகளுக்கு சென்று குப்பை சேகரிக்கின்றனர். இருப்பினும் அனைத்து வீடுகளுக்கும் நேரடியாக சென்று குப்பை சேகரிப்பது இல்லை. தவிர, துப்புரவு பணியாளர்கள் செல்லும் சமயங்களில் சில வீடுகளின் உரிமையாளர்கள் குப்பையை அளிப்பதும் இல்லை.
சாலைகளில் வைக்கப்பட்டுள்ள தொட்டியில் கொட்டப்படும் குப்பையை, மாநகராட்சி சுகாதாரத் துறையினர் டிப்பர் லாரிகள் மூலமும், ஹைட்ராலிக் வகையிலான லாரியை பயன்படுத்தியும் எடுத்துச் செல்கின்றனர்.
இந்த சமயத்தில் குப்பைத் தொட்டிகள் தாறுமாறாக வைக்கப்படுவதாக புகார் கூறப்படுகிறது. இதுகுறித்து நியூ சித்தாப்புதூரைச் சேர்ந்த கண்ணன், ஆவாரம்பாளையத்தைச் சேர்ந்த ராஜ்குமார், பீளமேட்டைச் சேர்ந்த சரவணன் உள்ளிட்டோர் கூறும்போது, ‘‘பீளமேடு, ஆவாரம்பாளையம், ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசலையும், விபத்தையும் ஏற்படுத்தும் வகையில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்படுகின்றன. போக்குவரத்து அதிகம் நிறைந்த குறுகிய சாலையில் 2 டன் அளவு கொண்ட பெரிய குப்பைத் தொட்டி வைக்கின்றனர். அதுவும் ஒதுக்குப்புறமாக இல்லாமல், சாலையை பாதி மறைத்தபடி வைக்கின்றனர். சில இடங்களில் 2 தொட்டிகள், 3 தொட்டிகள் தேவையின்றி வைத்து இருப்பர். சில இடங்களில் பெரிய குப்பைத் தொட்டி தேவையாக இருக்கும். ஆனால், அங்கு அரைடன் கொள்ளளவு கொண்ட குப்பைத் தொட்டியை வைத்திருப்பர். இதனால் அங்கு கொட்டப்படும் குப்பையால் தொட்டி நிறைந்து, சாலையில் குப்பை வழிந்து காணப்படும். தேவையான கொள்ளளவுகளில் குப்பைத் தொட்டி வைக்கவும், விபத்துகளையும், போக்குவரத்து நெரிசலையும் ஏற்படுத்தாத வகையில் குப்பைத் தொட்டியை ஓரமாக வைக்கவும் சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு மாநகராட்சி உயரதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும்’’ என்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘குப்பைத் தொட்டி இல்லாத நகரம் என்பதை நோக்கமாக கொண்டு வீடு வீடாக குப்பை சேகரிப்புப் பணியை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது. இருப்பினும் தற்போதைய சூழலில்மாநகரில் பொது இடங்களிலும் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. மாநகரில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு இல்லாத வகையில் குப்பைத் தொட்டியை ஓரமாக வைக்க வேண்டும். ஒர் இடத்துக்கு எத்தனை கொள்ளளவிலான குப்பைத் தொட்டி தேவையோ, அதைத்தான் வைக்க வேண்டும்.குறுகியஇடத்துக்கு பெரியத் தொட்டிகள், அதிக குப்பை சேகரமாகும் இடங்களில் குறுகிய தொட்டிகள் எனமாற்றி வைக்க கூடாது என மாநகராட்சி மண்டல சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், துப்புரவு மேற் பார்வையாளர்கள், குப்பை லாரி ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.