

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பான புகாரில் சிக்கிய உதவி பேராசிரியர் மீது பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்பேரில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 2015-ல் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக இப்பல்கலைக்கழக மாணவி ஒருவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘பல்கலைக்கழக வரலாற்றுத் துறை உதவி பேராசிரியர் வினோத் வின்சென்ட் ராஜேஷ் மீது மாணவிகள் பாலியல் புகார் அளித்தனர். இப்புகாரை விசாரிக்க பல்கலைக்கழக அளவில் குழு அமைக்கப்பட்டது.
இக்குழு நடத்திய விசாரணையில் வினோத் வின்சென்ட் ராஜேஷ் மீதான புகார் நிரூபிக்கப்பட்டதால், அவரை பணியிடை நீக்கம் செய்யவும், இரு ஊதிய உயர்வை நிறுத்தி வைக்கவும் கடந்த 1.2.2016-ல் நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இதுபோன்ற செயல்களில் இனிமேல் ஈடுபடக்கூடாது என்றும்கடுமையாக அவர் எச்சரிக்கப்பட்டார். பணியிடங்களில் பாலியல் தொல்லைகளில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் வினோத் வின்சென்ட் ராஜேஷ் மீது வழக்குப்பதிவு செய்ய திருநெல்வேலி பேட்டை காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.
நீதிபதி உத்தரவு
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்த சில வாரங்களுக்கு முன் பிறப்பித்த உத்தரவு: பணியிடங்களில் பாலியல் தொல்லைகளில் இருந்து பாதுகாக்கும் சட்டப்படி, பாலியல் புகார் தொடர்பான உள் விசாரணையில் குற்றம் நடந்திருப்பது உறுதியானால், அந்த புகாரை மேல் நடவடிக்கைக்காக போலீஸாருக்கு அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த விதியை பின்பற்ற பல்கலைக்கழகம் தவறிவிட்டது.
குற்றம் 2015-ல் நடைபெற்றுள்ளது. அதே ஆண்டு ஜூலையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ரிட் மனு 2016-ல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. துரதிருஷ்டவசமாக 2020 ஜனவரியில்தான் இறுதி விசாரணைக்கு வந்துள்ளது. இந்தவழக்கு உயர் நீதிமன்றத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருந்ததால், தாமதத்தை காரணம்காட்டி குற்றவியல் நடைமுறைச் சட்டம் 468 பிரிவின் கீழ் காவல் ஆய்வாளரோ அல்லது நீதித்துறை நடுவரோ புகாரை முடிக்கக்கூடாது.
எனவே, திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர், உள் விசாரணைக் குழு அறிக்கையுடன் மனுதாரரின் புகாரை 3 வாரத்தில் பேட்டை காவல் ஆய்வாளருக்கு அனுப்ப வேண்டும். அந்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் தாமதம் இல்லாமல் வழக்கு பதிவு செய்து, 3 மாதத்தில் விசாரணையை முடிக்கவேண்டும்’’ இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியிருந்தார்.
இதையடுத்து கடந்த வாரம் நடைபெற்ற பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, உதவி பேராசிரியர் வினோத் வின்சென்ட் ராஜேஷ் மீது பல்கலைக்கழக பதிவாளர் சந்தோஷ்பாபு பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வினோத் வின்சென்ட் ராஜேஷ் மீது இந்திய தண்டனை சட்டம் 509-ன் கீழும், பெண்களுக்கு தொல்லை கொடுத்ததாக பிரிவு 4-ன் கீழும் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.