

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம் வேப்பத்தூர் அருகே உள்ள பாகவதபுரத்தில் செண்பகவல்லி அம்பாள் சமேத காக்கேஸ்வரர் கோயில் உள்ளது. பழமையான இக்கோயிலின் அருகில் நேற்று முன்தினம் 2 பேர் பள்ளம் தோண்டி, நவீன கருவிகளைக் கொண்டு ஆய்வு செய்துகொண்டிருந்தனர். இதைப்பார்த்த கோயில் குருக்கள் மற்றும் அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
கும்பகோணம் தாலுகா போலீஸார் வந்து இருவரையும் பிடித்து திருவிடைமருதூர் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்தனர். அவர்கள், சோழபுரத்தைச் சேர்ந்த முகமது அசார் மகன் இப்னு காலிப்(36), பீர் முகமது (65) என்பது தெரியவந்தது.
தங்கம் மற்றும் ஐம்பொன் போன்றவற்றைக் கண்டறியும் நவீன கருவி உதவியுடன் தங்கம் இருக்கிறதா எனப் பார்த்தோம் என்று விசாரணையின்போது அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, அவர்களிடம் இருந்த நவீன டிடெக்டர், தொலை உணர் கருவி மற்றும் கோடாரி, கடப்பாரை போன்றவற்றைக் கைப்பற்றிய போலீஸார், இதுகுறித்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்து காவல் துறை வட்டாரத்தினர் தெரிவித்தது:
இப்னு காலிப் மலேசியாவில் வேலை செய்தவர். அங்கிருந்தபோது, பழங்கால கோயில்கள் மற்றும் கோயில்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் தங்கப் புதையல் கிடைக்க வாய்ப்புள்ளது என்று சமூக வலைதளங்களில் கேள்விப்பட்ட இப்னு காலிப், இதுகுறித்து யூ டியூபில் ஏதேனும் விவரம் கிடைக்குமா என்று பார்த்துள்ளார்.
இதையடுத்து, சொந்த ஊருக்கே வந்துவிட்ட நிலையில் பழமையான பல்வேறு கோயில்களுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். தொடர்ந்து தங்கம் போன்ற உலோகப் பொருட்கள் பூமிக்கு அடியில் இருந்தால் அவற்றைக் கண்டுபிடிக்க உதவும் வகையிலான தொலை உணர் கருவி, டிடெக்டர் போன்ற நவீன உபகரணங்களை ஹைதராபாத்தில் இப்னு காலிப் வாங்கிஉள்ளார்.
இதையடுத்து, தனது ஊரைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான பீர் முகமதுவை துணைக்கு அழைத்துக் கொண்டு நேற்று முன்தினம் மதியம் பாகவதபுரம் சிவன் கோயில் பகுதிக்குச் சென்று நோட்டமிட்டுள்ளனர். பின்னர் மாலை நேரமானவுடன் கோயிலுக்கு அருகே உள்ள பகுதியில் ஒரு இடத்தில் கடப்பாரை உதவியால் பூமியில் பள்ளம் தோண்டியுள்ளனர். அந்தப் பள்ளத்தில், நவீன உபகரணங்களை வைத்துக் கொண்டு காதில் ஹெட்போனை இணைத்துக் கொண்டு இப்னு காலிப் ஏதோ செய்வதையும் அவருக்கு அருகில் பீர் முகமது இருந்ததையும் கோயில் குருக்கள் பார்த்துள்ளார். உடனே, பொதுமக்களிடம் கூறியதுடன், போலீஸாருக்கும் தகவல் தெரிவித்ததை அடுத்து இருவரும் சிக்கியுள்ளனர் என்று தெரிவித்தனர்.
தொடர்ந்து, நவீன கருவிகளைக் கொண்டு பள்ளத்தில் எப்படி சோதனை செய்தேன் என போலீஸாரிடம் இப்னு காலிப் செய்து காட்டினார். இதையடுத்து, 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த திருவிடைமருதூர் போலீஸார் இருவரையும் நேற்று கைது செய்தனர்.