

எதிரி நாடுகளின் ஆளில்லா உளவுவிமானங்களை திசை திருப்பி, நம் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் நவீன குட்டி விமானத்தை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர்.
எதிரி நாடுகளின் ஆளில்லா உளவு விமானங்களை திசை திருப்பி, வேறு இடத்தில் தரையிறங்கச் செய்யும் விதமாக நவீன குட்டி விமானத்தை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள இது, எதிரி நாட்டு உளவு விமானத்தின் இருப்பிடத்தைக் கண்டறிந்து அதன் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை முடக்கும். விமானத்தை திசை திருப்புவதோடு, குறிப்பிட்ட இடத்தில் தரையிறங்கவும் செய்துவிடும். இது தன்னிச்சையாகவும் செயல்படும். இணையத்தின் உதவியோடும் கட்டுப்படுத்தலாம்.
ஐஐடி விமான பொறியியல் துறை உதவி பேராசிரியர் ரஞ்சித் மோகனின் வழிகாட்டுதலில், பி.டெக். இறுதி ஆண்டு மாணவர்வாசு குப்தா, துறை ஆராய்ச்சியாளர் ரிஷப் வசிஷ்டா ஆகியோர் இந்தகுட்டி விமானத்தை வடிவமைத்துள்ளனர்.
இதுகுறித்து மாணவர் வாசு குப்தா கூறும்போது, ‘‘நாங்கள் உருவாக்கியுள்ள நவீன குட்டிவிமானம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடியது. இது வெளியிடும் போலியான ரேடியோ அலைகளை எதிரி நாடுகளின் உளவு விமானங்கள் ஈர்க்கும்போது, அவற்றில்உள்ள ஜிபிஎஸ் கருவிகள் முடங்கிவிடும். அதன் செயல் பாட்டை நம் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து, உளவு விமா னத்தை திசை திருப்பலாம். பாதுகாப்பான இடத்தில் தரையிறங்கவும் செய்யலாம். பாதுகாப்பு படையினருக்கு இந்த விமானம் பெரும் வரப்பிரசாதமாக இருக்கும்’’ என்றார்.