

எஸ். முஹம்மது ராஃபி
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா இன்று (மார்ச் 6) தொடங்குகிறது. இதில் இந்தியா, இலங்கையில் இருந்து பத்தாயிரம் பேர் கலந்து கொள்ள உள்ளனர்.
கடலில் இயற்கைச் சீற்றம், புயல் மற்றும் பேராபத்து காலங்களில் காப்பாற்றவும், பெருமளவு மீன்கிடைக்கவும் மீனவர்கள் வழிபாடுநடத்திய பிறகே கடலுக்குச் செல்வது வழக்கம். ராமேசுவரம் ஓலைக்குடாவைச் சேர்ந்த அந்தோணிப்பிள்ளை பட்டங்கட்டி, தொண்டியைச் சேர்ந்த சீனிக்குப்பன் பட்டங்கட்டி ஆகியோர் கடந்த 1913-ம் ஆண்டு கச்சத்தீவில் சிறிய ஓலைக் குடிசையில் புனித அந்தோணியார் ஆலயத்தை நிறுவினர். அதன் பிறகு ஆண்டுதோறும் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் அந்தோணியார் ஆலயத் திருவிழா நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இதற்காக ராமேசுவரத்தில் இருந்து கச்சத்தீவு திருவிழாவுக்கு 74 விசைப்படகுகள், 24 நாட்டுப் படகுகளில் செல்ல அனுமதி பெறப்பட்டு 2,881 பயணிகள் செல்ல அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இலங்கையில் இருந்து சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர்.
இன்று (வெள்ளிக்கிழமை) காலை சுங்கத் துறை சோதனைக்குப் பிறகு அதிகாலை 6 மணி முதல் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து படகுகள் கச்சத்தீவு செல்லத் தொடங்கும். மறுநாள் (சனிக்கிழமை) திருவிழா முடிந்ததும் காலை 10 மணிக்கு கச்சத்தீவில் இருந்து புறப்பட்டு அனைத்து விசைப்படகுகளும் மாலை 5 மணிக்குள் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தை வந்தடையும்.
திருவிழாவுக்கு வருபவர்கள் மதுபானங்களை எடுத்து வரவோ,மது அருந்திவிட்டு வரவோ, புகைபிடிக்கவோ, தடை செய்யப்பட்ட பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் எடுத்து வரவோ அனுமதி கிடையாது. மடிக்கணினி, கேமராஉள்ளிட்ட மின்னணு சாதனங்களை எடுத்து வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் கச்சத்தீவில் உணவு சமைக்கவோ, சேலை, கைலி, துணிவகைகள், சோப்பு, எண்ணெய் போன்ற வியாபாரம் மற்றும் பண்டமாற்றம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஒருநபர் ரூ.5,000 வரை எடுத்துச் செல்லாம். திருவிழாவை முன்னிட்டு கச்சத்தீவில் இந்திய ரூபாயை இலங்கை ரூபாயாக மாற்றஇலங்கை அரசு 2 தினங்களுக்குவங்கி சேவையும் அனுமதித்துள்ளது. கச்சத்தீவில் திருவிழாவின்போது குடிநீர், மருத்துவம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை இலங்கை கடற்படையினர் செய்து வருகின்றனர்.
நிகழ்ச்சி நிரல்
அந்தோணியார் ஆலயம் முன்பாக உள்ள கொடி மரத்தில் இன்று மாலை 5 மணி அளவில் கொடியேற்றப்பட்டு திருவிழா தொடங்கும். தொடர்ந்து சிலுவைப் பாதை திருப்பலி பூஜையும், சிறப்புப் பூஜைகளும் நடைபெறும். இரவு அந்தோணியார் தேர் பவனி நடைபெறும்.
திருவிழாவின் 2-வது நாளான சனிக்கிழமை காலை 6 மணி அளவில் சிறப்புத் திருப்பலி பூஜைகள் தமிழ், சிங்கள மொழிகளில் நடைபெறும். திருப்பலி பூஜைக்குப் பிறகு தேர் பவனியும், அதைத் தொடர்ந்து கொடியிறக்கமும் நடைபெற்று திருவிழா முடிவடையும்.