

மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசனை இஸ்லாமிய தலைவர்கள் திடீரென சந்தித்தனர். தங்கள் போராட்டத்துக்கு மக்கள் நீதி மய்யம் உறுதுணையாக இருப்பதற்கு கமல்ஹாசனுக்கு இஸ்லாமிய அமைப்பினர் நன்றி தெரிவித்தனர்.
தமிழகத்தில் சிஏஏ எதிர்ப்பு போராட்டம் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கு திமுக உள்ளிட்ட கூட்டணிக்கட்சிகள் ஆதரவாக நிற்கின்றன. இந்நிலையில் சமீபத்தில் மதுரை உலமாக்கள் அறிக்கையை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் அவர்களை அழைத்து பேசினார். இன்று பேட்டி அளித்த ரஜினி காந்த் அமைதி நிலவ அனைத்து விஷயங்களுக்கும் உறுதுணையாக இருப்பேன் என்று உலமாக்களிடம் வாக்களித்ததாக தெரிவித்தார்.
ரஜினியைத் தொடர்ந்து மக்கள் நீதிமய்யம் நிறுவனர் கமல் ஹாசனை இஸ்லாமிய கூட்டமைப்பினர் சிலர் சந்தித்தனர். அவர்களுடன் பினராயி விஜயன் அறிவுறுத்தலின் பேரில் மலபார் முஸ்லீம் அசோசியேஷன் நிர்வாகிகளும் கலந்துக்கொண்டனர்.
இதுகுறித்து மக்கள் நீதிமய்யம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
“இன்று நமது தலைவரை தமிழகத்தை சேர்ந்த பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் சந்தித்துப் பேசினர். இவர்களுடன் கேரள முதல்வர் பினராய் விஜயன் அறிவுறுத்தலின் பேரில் சென்னையில் உள்ள மலபார் முஸ்லிம் அசோஷியேஷனைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக முதல் கட்சியாக மக்கள் நீதி மையம் கட்சி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தமைக்கு தங்களின் நன்றியினை தலைவரிடம் தெரிவித்துக் கொண்டனர்.
தொடர்ந்து அதற்கு எதிர்ப்பான நிலையை மேற்கொண்டிருக்கும் நம்மவருக்கு தங்கள் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டனர். மேலும் அனைத்து தரப்பு மக்களும் பங்கெடுக்கும் போராட்டமாக இது மாறுவதற்கு ஆதரவு தரவேண்டும் என்று கமல்ஹாசனை அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
நம்மவர் அவர்களிடம் எப்போதும் எல்லா வகையிலும் இந்திய இறையாண்மைக்கும், இந்திய மக்களின் ஒற்றுமைக்கும் உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி கூறினார். போராட்டம் உறுதியாகவும் வலிமையாகவும் நடந்திடவேண்டும், அதேநேரம் எந்த வகையிலும் அதில் வன்முறை புகுந்துவிடக்கூடாது என்பதில் நாம் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
நம்மவரின் கருத்துக்கு அனைத்து இஸ்லாமிய அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து, தங்கள் ஒத்துழைப்பு மக்கள் நீதி மையம் கட்சிக்கு எப்போதும் இருக்கும் என்று தெரிவித்தனர்”.
இவ்வாறு மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.
ஜனநாயக முஸ்லிம் முன்னேற்றக் கழகம், தமிழ்நாடு அஹ்லே சுன்னத் ஜமாஅத் கூட்டமைப்பு, தமிழ்நாடு சுன்னத் ஜமாத் கூட்டமைப்பு, மாநில உலமாக்கள் பேரவை, , சுன்னத் ஜமாத் பேரமைப்பு, திருவொற்றியூர் ஜாமியா மஸ்ஜித் சமாதானம் அறக்கட்டளை, புளியந்தோப்பு மஸ்ஜிதுகளின் கூட்டமைப்பு, முஸ்லிம் சுன்னத் ஜமாஅத் ,கீழக்கரை பகுதி இஸ்லாமிய அமைப்பினர் மற்றும் மலபார் முஸ்லிம் அசோஷியேஷன் சென்னை ஆகியோர் கமல் ஹாசனை சந்தித்தனர்.