

மாநில மனித உரிமை ஆணையத்தை இழிவுபடுத்தி மாத இதழ் ஒன்றுக்குப் பேட்டி அளித்ததாக கூடுதல் துணை ஆணையர் வெள்ளத்துரையிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபிக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
காவலர்கள் குறித்து வெளிவரும் மாத இதழ் ஒன்றின் பிப்ரவரி மாத இதழில், "குற்றவாளிகள் அதிகரிப்பதற்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் முக்கியக் காரணம்" என தலைப்பிட்டு திருநெல்வேலி மாவட்டக் குற்ற ஆவணக் காப்பகத்தில் கூடுதல் துணை ஆணையராகப் பணியாற்றும் வெள்ளத்துரையின் பேட்டி வெளியாகி இருந்தது.
மனித உரிமைகள் ஆணையத்தின் கண்ணியத்தை இழிவுபடுத்தும் வகையில் வெளியான இந்த பேட்டி குறித்து தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய பொறுப்புத் தலைவரான துரை.ஜெயச்சந்திரன் தாமாக முன்வந்து வழக்காக எடுத்துள்ளார்.
வெள்ளதுரையின் கருத்து குறித்து அவரிடம் விசாரணை நடத்தவும், அதில் நடவடிக்கை எடுக்கவும், அது தொடர்பான அறிக்கையை விரைந்து தாக்கல் செய்யவும் தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் தமிழக அரசுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.