

ஒரு ரூபாய் கூட புதுச்சேரி அரசு செலவு செய்ய முடியாத வகையில் அமைச்சக ஊழியர்கள் நூதனப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளதால் புதுச்சேரி அரசுக்கு கடும் சிக்கல் உருவாகியுள்ளது.
அனைத்துத் துறைகளிலும் உள்ள அமைச்சக மற்றும் கணக்கு அதிகாரி பதவிகள் புதுச்சேரி அரசு நிர்வாகத்தின் அச்சாணியாகத் திகழ்கிறது. இந்தப் பதவி வகிப்பவர்கள்தான் புதுச்சேரி அரசு தொடர்பான அனைத்து நிதி செயல்பாடுகளும் ஆண்டு வரவு-செலவு தயாரித்தல், அரசு நிதியைச் செலவு செய்தல் உள்ளிட்ட ஊழியர்கள் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் கையாண்டு வருகின்றனர். ஆனால், அரசுத்துறையில் முக்கியப் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. இதற்காக பலமுறை அரசிடம் வலியுறுத்தியும் கண்டுகொள்ளாததால் இன்று முதல் அமைச்சக ஊழியர்கள் நூதனப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
இது தொடர்பாக புதுச்சேரி ஒருங்கிணைந்த அமைச்சக ஊழியர்கள் சங்கத்தினர் பொதுச்செயலர் ராஜேந்திரன் கூறுகையில், ''காலிப் பணியிடங்களை நிரப்புவது தொடங்கி முக்கியக் கோரிக்கைகளுக்குத் தீர்வு காண வேலை நிறுத்தம் செய்யாமல் புதிய யுக்தியைக் கையாளும் முறையை இன்று முதல் தொடங்கியுள்ளோம்.
புதுச்சேரி அரசானது கணக்கு மற்றும் கருவூலத்துறை இயக்குனரக ஒப்புதல் இல்லாமல் ஒரு ரூபாய் கூட செலவு செய்ய முடியாது. சம்பந்தப்பட்ட செலவுப் பட்டியல்களுக்கு ஒப்புதல் அளித்த பின்பே செலவு செய்ய முடியும். ஆளுநர் அலுவலகம், முதல்வர் அலுவலகம் தொடங்கி அனைத்துத் துறைகளும் நிதி செலவுகளை பில்லாக கணக்கு மற்றும் கருவூலத்துறைக்கு சமர்ப்பிப்பார்கள். இதைக் கணக்கு மற்றும் கருவூலத்துறையில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளால் ஆய்வு செய்த பின்பே செலவினங்களுக்கு ஒப்புதல் தரப்படுகிறது.
நூதன முறைப்படி வழக்கம்போல் கணக்கு மற்றும் கருவூலத்துறையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பல்வேறு துறைகளில் இருந்து பெறப்படும் நிதி செலவுக்கான பில்களை ஆய்வு செய்து ஒப்புதல் தருவார்கள். ஆனால், ஒப்புதல் அளித்த பில்களை மின்னணு முறையில் அனுமதிக்கும் சேவையை ( இசிஎஸ் ) இன்று முதல் செய்வதில்லை என்று செயல்படுத்தத் தொடங்கியுள்ளோம். இதனால் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களிலும் அரசு நிதியை செலவு செய்ய முடியாது" என்று தெரிவித்தார்.
நூதனப் போராட்டம் தொடர்பாக அரசுப் பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளன. அரசுக்குத் தெரிவித்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை. இதனால் இப்போராட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் பிரச்சினைக்குத் தீர்வு காணாவிட்டால் மேலும் தீவிரமடையும் என்றும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.