

அதிமுக ஆட்சியில் அமைச்சர்கள் எல்லாம் தங்களைக் குண்டர்களாக உருமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
சிவகாசியில் பத்திரிகையாளர் கார்த்தி தாக்கப்பட்டதைக் கண்டித்து திமுக முன்னாள் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு தோழமைக் கட்சிப் பிரமுகர்கள் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதில் பேசிய தங்கம் தென்னரசு, "அதிமுக ஆட்சியில் அமைச்சர்கள் எல்லாம் தங்களைக் குண்டர்களாக உருமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். தொடர்ச்சியாக இது போன்ற அராஜகங்களில் ஈடுபடுவதன் மூலம் மக்கள் மத்தியில் அச்ச உணர்வை விதைக்கிறார்கள். ஜனநாயகத்திற்கு ஆதரவான சக்திகளின் குரல்வளையை நெறிக்கிறார்கள்.
இப்படிப்பட்ட அராஜகங்களை, அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டால் மக்கள் பயந்து விடுவார்கள், அரசியல் கட்சிகள் பயந்து விடும் என்று மனப்பால் குடிக்கிறார்கள்.
ராஜேந்திர பாலாஜியை அமைச்சர் பதவியில் நீக்குவதோடு அவரைக் கைது செய்ய வேண்டும் என்பதுதான் இந்த ஆர்ப்பாட்டத்தின் முக்கியக் கோரிக்கை" என்றார்.
தொடர்ந்து பத்திரிக்கையாளர் தாக்குதல் சம்பவத்தில் உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கண்ணனை சந்தித்தும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெருமாளை சந்தித்தும் திமுக மற்றும் தோழமை கட்சியினர் மனு கொடுத்தனர்.