

மதுரை சித்திரைத் திருவிழாவினை சிறப்புடன் நடத்துவதற்காக 4 உதவி செயற்பொறியாளர்கள் குழுவும், சுகாதாரத்தை மேம்படுத்த 200 சுகாதார பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மாநகராட்சி ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ச.விசாகன் இன்று ஆய்வு செய்தார்.
மதுரை மாநகராட்சியில் நான்கு மாசி வீதிகள், பெரியார் பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ‘ஸ்மார்ட் சிட்டி’ பணிகள் நடக்கிறது.
இந்தப் பகுதிகளில் ‘ஸ்மார்ட்’ சாலை பணி, 24 மணி நேரம் குடிநீர் விநியோகம் குழாய் அமைக்கும் பணிகள், அலங்கார நடைபாதை அமைக்கும் பணிகள், மழைநீர் வடிகால் அமைத்தல், தரைவழி மின்வயர் செல்வதற்கான வசதிகள் ஏற்படுத்துதல் மற்றும் ஜவஹர்லால் நேரு புனரமைப்பு திட்டத்தின் கீழ் பாதாளச் சாக்கடை அமைப்பினை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில், வரும் ஏப்ரல் மாதத்தில் சித்திரை திருவிழா தொடங்க உள்ளதால் அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோவில் சார்பில் தேர் பவனி நடைபெறும்.
இதற்கென சாலை சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு திருவிழாவினை சிறப்புடன் நடத்துவதற்காக நான்கு உதவி செயற்பொறியாளர்கள் தலைமையில் பொறியாளர்கள் குழுவும், நான்கு சுகாதார அலுவலர்கள் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் குழுவும், 200 சுகாதார பணியாளர்கள் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
சாலைகளில் உள்ள மண் குவியல்களை அகற்றுதல், இடிபாடுகளை அகற்றுதல், பாதாளச் சாக்கடை அடைப்புக்களை சரி செய்தல் மற்றும் நான்கு மாசி வீதிகளில் சுகாதார பிரிவு பணியாளர்கள் உடன் ஒருங்கிணைந்து சுத்தம் செய்யும் பணியினை மேற்கொள்ள மாநகராட்சி ஆணையாளர் விசாகன் உத்தரவிட்டுள்ளார்.
ஆணையாளர் ச.விசாகன், ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் பெரியார் பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளையும் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது நகரப்பொறியாளர் அரசு, உதவி நகர்நல அலுவலர் வினோத் ராஜா, உதவி செயற்பொறியாளர் ஆரோக்கிய சேவியர், உதவிப் பொறியாளர்கள் மயிலேறி நாதன், ஆறுமுகம், கந்தப்பா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.