

சிஏஏ உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு உதவ பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டவர்களுடன் இஸ்லாமிய குருமார்கள் பேசினால் பிரச்சினை தீரும். அதற்காக அனைத்து உதவிகளையும் தான் செய்வதாக ரஜினி தெரிவித்துள்ளார்.
ரஜினி மக்கள் மன்றச் செயலாளர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார். ஒரு மணிநேரத்துக்கும் மேலாக இந்தக்கூட்டம் நடந்தது. இதற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினியிடம் இஸ்லாமிய குருமார்களைச் சந்தித்தீர்களே? என்ன பேசினீர்கள்? என செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்குப் பதிலளித்த ரஜினி, “அது ஒரு இனிமையான சந்திப்பு. அவர்கள் முக்கியமாகச் சொல்வது சகோதரத்துவம், அன்பு, அமைதி நாட்டில் அமைதி நிலவ வேண்டும். அதற்கு நாங்கள் எதையும் செய்யத் தயாராக இருக்கிறோம். நீங்கள் அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டார்கள்.
நிச்சயமாக அதற்கு உறுதுணையாக இருப்பேன் என்று நான் சொன்னேன். சிஏஏவில், என்பிஆரில் என்னென்ன மாற்றங்கள் வேண்டும் என்று மதகுருமார்களாகிய நீங்கள் உங்களுக்குள் ஆலோசனை நடத்துங்கள். உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் மோடியிடம் நேரில் பேச நான் நேரம் வாங்கித் தருகிறேன். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினால் அது நல்ல நடைமுறையாக இருக்கும். நிச்சயமாக அவர்கள் கேட்பார்கள். அதற்குத் தேவையான உதவிகளைச் செய்ய நான் தயாராக இருக்கிறேன் என்று கூறினேன்” என்று தெரிவித்தார்.
நடிகர் ரஜினிகாந்த் சமீபகாலமாக சிஏஏ, என்பிஆர் விவகாரங்களில் தனது நிலையை மாற்றிக்கொண்டுள்ளார். டெல்லி கலவரம் குறித்து தனது கண்டனத்தை வெளிப்படுத்தினார். இஸ்லாமிய குருமார்கள் வெளியிட்ட அறிக்கையைப் படித்து அவர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இஸ்லாமியத் தலைவர்களுடன் அவர் நடத்திய பேச்சுவார்த்தை முக்கியமான நிகழ்வாகப் பார்க்கப்படும் நிலையில், தற்போது அவரது பேட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.