

தனக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோவாக எடுத்து மிரட்டியதாக கல்லூரி மாணவி அளித்த புகாரின் பேரில் பிரபல நடிகர் சூர்யகாந்தின் மகன் கைது செய்யப்பட்டார்.
சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் அண்ணா சாலையில் ஒரு கல்லூரியில் பயின்று வந்தார். அவரது தோழி மூலம் அண்ணா நகர், திருமங்கலத்தில் வசிக்கும் விஜய் ஹரீஷ் (25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. விஜய் ஹரீஷ் குணச்சித்திர நடிகர் சூர்யகாந்தின் மகன் ஆவார். விஜய் ஹரீஷுக்கும் கல்லூரி மாணவிக்கும் இடையேயான நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் காதலித்து வந்தனர்.
கடந்த ஜனவரி மாதம் 2-ம் தேதி தோழிக்குப் பிறந்த நாள் என விஜய் ஹரீஷ், கல்லூரி மாணவியை விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுக்க, மாணவி மயங்கி விழுந்தார். இந்நிலையில் அந்த மாணவியை விஜய் ஹரீஷ் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் மாணவியை வீடியோ, புகைப்படம் எடுத்துள்ளார். இரண்டு மணிநேரம் கழித்து எழுந்த மாணவியை வீடியோவைக் காட்டி மிரட்டியுள்ளார்.
வீடியோவைக் காட்டி மிரட்டியே பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். விஜய் ஹரீஷின் மிரட்டலுக்குப் பயந்தே கல்லூரி மாணவி இதுகுறித்து யாரிடமும் சொல்லவில்லை.
ஒரு கட்டத்தில் விஜய் ஹரீஷின் தொல்லை அதிகமாகவே, தாங்க முடியாத கல்லூரி மாணகி வீட்டில் நடந்ததைக் கூறினார். குடும்பத்தினர் அறிவுறுத்தலின் பேரில் பெண்கள், குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
புகாரைப் பெற்ற போலீஸார் திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு புகாரை அனுப்பினர். கல்லூரி மாணவியை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பினர், பின்னர் விஜய் ஹரீஷை அழைத்து விசாரணை நடத்தினர். போலீஸார் விசாரணையில் புகார் உண்மை எனத் தெரிந்ததை அடுத்து விஜய் ஹரீஷைக் கைது செய்தனர்.
இதையடுத்து விஜய் ஹரீஷ் மீது ஐபிசி பிரிவு 328 (காயம் உண்டாக்குதல்), 354 சி (பெண்ணை ஆபாசமாகப் படம் எடுத்தல்) 343 (ஒருநபரைத் தவறாகக் கட்டுப்படுத்தி அடைத்து வைத்தல்), 376 (பாலியல் பலாத்காரம்), 506 (1) (கொலை மிரட்டல்) ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட விஜய் ஹரீஷ் நடிகர் சூர்யகாந்தின் மகன் ஆவார்.
பாக்யராஜின் 'தூறல் நின்னு போச்சு', பாரதிராஜாவின் 'கிழக்குச் சீமையிலே', வெற்றிமாறனின் 'வடசென்னை' உட்பட ஏராளமான படங்களில் சூர்யகாந்த் நடித்துள்ளார். அவரது மகன் விஜய் ஹரிஷும் தற்போது ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில் பாலியல் வன்கொடுமை வழக்கில் அவர் கைதாகியுள்ளார்.