புதுச்சேரியில் சந்தேகத்தின் பேரில் 9 பேரிடம் பரிசோதனை; யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை: சுகாதாரத்துறை இயக்குநர் தகவல்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

புதுவையில் சந்தேகத்தின் பேரில் 9 பேரை பரிசோதித்ததில் யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்சமயம் யாரும் கரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை எனவும், புதுவை மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் தெரிவித்தார்.

இதுதொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் மோகன்குமார் இன்று (மார்ச் 5) செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

"புதுவையில் சந்தேகத்தின் பேரில் 9 பேரைப் பரிசோதித்துப் பார்த்தபோது யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்சமயம் புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய பகுதிகளில் யாரும் கரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை.

மேலும், இந்த நோய் வராமல் இருப்பதற்காக மத்திய அரசு நடத்தும் பலகட்ட ஆலோசனைக் கூட்டத்தில் நாங்கள் பங்கேற்று, அந்த ஆலோசனைகளை நடைமுறைப்படுத்தி வருகிறோம். கோரிமேடு அரசு மார்பு நோய் மருத்துவமனை, ஜிப்மரில் தனிமைப்படுத்தப்பட்ட படுக்கை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் ஒவ்வொரு தனியார் மருத்துவக் கல்லூரியிலும் 10 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கை வசதியை தயார் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளோம். அதன்படி, அவர்களும் படுக்கை வசதியை ஏற்பாடு செய்து வைத்துள்ளனர்.

கரோனா வைரஸைப் பரிசோதிப்பதற்கான வைராலஜி லேப் ஜிப்மர் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக கிண்டிக்கு ரத்த மாதிரிகள் அனுப்பப்பட்டு 7 மணிநேரத்தில் மருத்துவப் பரிசோதனை முடிவுகளைத் தெரிந்துகொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கரோனா வைரஸ் வராமல் இருக்க, தனி மனித சுகாதாரம் மிகவும் முக்கியம். கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். நடமாட்டம் மிகுந்த பகுதிகளுக்கு செல்லக் கூடாது. முக்கியமாக தும்மல், இருமல் இருப்பவர்கள் துணியை முகத்தில் வைத்து தும்ம வேண்டும். தும்மல், இருமலின் நீர்த்துளிகள் மற்றவர்கள் மீது படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அந்த நபர்கள் அருகே மற்றவர்கள் செல்லாமல் இருப்பது நல்லது.

தற்போதைய சூழலில் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டிய அவசியம் இல்லை. அச்சமுள்ளவர்கள் மாஸ்க் அணிந்துகொள்ளலாம். குறிப்பாக, சளி, தும்மல் உள்ளவர்கள் மாஸ்க் அணிந்துகொள்ளவது நல்லது. மாஸ்க் தேவையான அளவு கையிருப்பு உள்ளது. அதில் பற்றாக்குறை ஏற்பட்டால் மத்திய அரசு உதவி செய்வதாகத் தெரிவித்துள்ளது. எனவே, புதுவை மக்கள் அச்சப்படத் தேவையில்லை. தனிமனித சுகாதாரத்துடன் கைகளைச் சுத்தப்படுத்துவது, வெந்நீர் அருந்துவது ஆகியவற்றைக் கடைப்பிடித்தால் இந்த நோயிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்".

இவ்வாறு டாக்டர் மோகன்குமார் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in