

திருச்சி மண்டலத்தைக் காட்டிக்காத்த கே.என்.நேரு திமுக முதன்மைச் செயலாளராகிவிட்டதால் திருச்சி திமுகவை யார் வழிநடத்துவது என்பதில் சிறு குழப்பம். இதைச் சரிசெய்வதற்காக ஒன்றுபட்ட திருச்சி மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தைக் கடந்த வாரம் நேருவே கூட்டினார். இந்தக் கூட்டத்தில் மிகவும் உருக்கமாக பேசிய நேரு, “புதிதாக பொறுப்புக்கு வந்திருக்கும் மாவட்டச் செயலாளர்கள் உங்களது சொந்தபந்தங்களை, சாதிக்காரங்கள பக்கத்துல வெச்சுக்குங்க; தப்பில்லை. ஆனா, அதுக்காக கட்சிக்காரன கைவிட்டுறாம அவங்களுக்கும் முக்கியவத்துவம் குடுங்க. மாவட்டச் செயலாளராக அறிவிக்கப்பட்டு 8 ஆண்டுகள் வரை நான் அங்கீகரிக்கப்படவில்லை. அந்த எட்டு ஆண்டுகளும் நான் பட்ட அவமானங்கள் கொஞ்சமல்ல. அத்தகைய சூழல் இப்ப இருக்கவங்களுக்கு வரவேண்டாம். தளபதியால் பொறுப்பாளராக அறிவிக்கப்பட்ட யாராக இருந்தாலும் அவர்களுக்குத் தொண்டர்கள் ஒத்துழைப்புக் கொடுக்கணும். இங்கிருக்கிற எத்தனையோ பேரை நான் வாய்க்கு வந்தபடி திட்டியிருப்பேன்; அடிச்சு வெரட்டி இருப்பேன். இந்த நேரத்துல அவங்ககிட்ட எல்லாம் நான் மன்னிப்புக் கேட்டுக்குறேன். உங்களால்தான் நான் இன்னைக்கு இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறேன். இதை என்றைக்கும் என்னால் மறக்கமுடியாது” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே மேலும் உணர்ச்சிவசப்பட்டு அழுதே விட்டார்.
- காமதேனு இதழிலிருந்து (8/3/2020)