Published : 05 Mar 2020 12:16 PM
Last Updated : 05 Mar 2020 12:16 PM

கரோனா வைரஸ்: அனைத்து வழிகளிலும் அரசு கண்காணித்து வருகின்றது; வைகோ கேள்விக்கு மத்திய சுகாதாரத் துறை பதில்

கரோனா வைரஸ் நோய்த்தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நாள்தோறும் கண்காணித்து வருகின்றார் என அத்துறையின் இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவ்பே விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சருக்கு வைகோ எழுத்துப்பூர்வமாக எழுப்பிய கேள்விகள்:

"சார்ஸ் போன்ற உயிர்க்கொல்லி நோய், சீனா மற்றும் அதன் சுற்றுப்புற நாடுகளைத் தாக்கி உள்ளதா? சீனாவின் அந்தப் பகுதிகளில் எத்தனை இந்தியர்கள் வேலை பார்க்கின்றார்கள்? சுற்றுலாப் பயணியாகச் சென்றவர்கள் எத்தனை பேர்? இந்நோய்த் தாக்குதலை எதிர்கொள்ள, போதிய அளவில் மருந்துகள் கையிருப்பில் உள்ளதா? அயல் நாடுகளில் இருந்து வருவோர், விமான நிலையங்களில் முறையாக சோதிக்கப்படுகின்றார்களா? நோய்த்தொற்று இருந்தால், அவர்களைத் தனியாகப் பிரித்து, உரிய வைத்தியம் அளித்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றதா? இந்நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, உலக சுகாதார நிறுவனம், ஏதேனும் வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி இருக்கின்றதா" ஆகிய கேள்விகளை வைகோ எழுப்பியிருந்தார்.

இக்கேள்விகளுக்கு சுகாதாரத் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவ்பே அளித்துள்ள விளக்கம்:

"சீனாவைத் தாக்கி உள்ள கரோனா வைரஸ் என்ற தொற்று நோய் குறித்து, அரசு கவனத்தில் கொண்டுள்ளது; அந்த நோய், இந்தியாவைத் தாக்கி விடாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

சீனாவில் ஹுபெய் மாகாணத்தில், வூஹான் என்ற நகரத்தில், இந்த நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே, ஹுபெய் மாகாணத்தில் உள்ள இந்திய மாணவர்கள், அங்கே பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிகின்ற இந்தியர்களை, மீட்டுக்கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டது. அதன்படி, 645 பேர் மீட்டு வரப்பட்டனர். அவர்கள், இரண்டு இடங்களில் உள்ள தடுப்புகளில் தனித்து வைக்கப்பட்டுள்ளனர். 243 பேர் மனேசர், 402 பேர் சாவ்லா ஆகிய இடங்களில் உள்ள இந்தியப் படை முகாம் மருத்துவமனைகளில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், ஒருவர் கூட கரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என்பது கண்டறியப்பட்டது. இருப்பினும், அவர்கள் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளனர்.

கேரளாவில் 3 பேருக்கு மட்டும், கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் உள்ளனர். அவர்களால் எந்த பாதிப்பும் இல்லை என மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

இந்தியாவின் 21 பன்னாட்டு விமான நிலையங்களிலும், பயணிகள் சோதிக்கப்பட்டு வருகின்றனர். சீனா, ஹாங்காங், சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வருகின்ற அனைவரும் கட்டாயமாகச் சோதிக்கப்படுகின்றனர். அந்த விமானப் பயணிகளுக்காக, விமான நிலையங்களில், தனி நடைவழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

விமான நிலையங்கள், துறைமுகங்கள், அண்டை நாடுகளுடன் தரைவழி நுழைவு வாயில்களில் பணிபுரிகின்ற அதிகாரிகளுக்கு, எபோலா, கரோனா போன்ற உயிர்க்கொல்லி தொற்று நோய்கள் குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது. 21 விமான நிலையங்களிலும், வெப்ப சோதனைக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ உதவிப் பணியாளர்கள், விமான நிலையங்களில் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில், இந்தச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேற்கண்ட தொற்று நோய்ப் பரவலைத் தடுப்பது குறித்து, உலக சுகாதார நிறுவனம் வழிகாட்டுதல்களை வெளியிட்டு இருக்கின்றது. அந்நிறுவனத்தின் இணையதளத்திலும் காணலாம்.

அதன்படி, சுகாதாரத் துறை அமைச்சகம், அனைத்து மாநில அரசுகளுக்கும் வழிகாட்டுதல்களை வழங்கி இருக்கின்றது. நோய்த்தொற்றைக் கண்டறியவும், மாநில எல்லைகளின் நுழைவு வாயில்களைக் கண்காணிக்கவும், சோதனைக்கான கூறுகளைச் சேகரிக்கவும், சரக்குகளைப் பொருள்களைப் பெட்டிகளில் அடைத்தல், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்லுதல் ஆகிய இடங்களிலும் ஒருங்கிணைந்த மருத்துவக் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தியாவின் 21 பன்னாட்டு விமான நிலையங்களிலும், அனைத்து பெரிய, சிறிய துறைமுகங்களிலும், எல்லைகளின் நுழைவாயில்கள், சோதனைச்சாவடிகளிலும், பயணிகள் மருத்துவ சோதனை செய்யப்படுகின்றனர்.

விமானங்களில் அறிவிப்புகள் செய்யப்படுகின்றன. படிவங்களில் கேட்கப்படுகின்ற கேள்விகளுக்கு, பயணிகளிடம் எழுத்து மூலம் விளக்கம் பெறப்படுகின்றது. மக்கள் கூடுகின்ற இடங்களில் எச்சரிக்கை விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்துடன் இணைந்து, எல்லைப்புறங்களில் உள்ள கிராமங்களில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, நோய்த்தொற்று குறித்து மக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு வருகின்றது.

ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்டத்தின் கீழ், சீனா, ஹாங்காங், தைவான், சிங்கப்பூர் நாடுகளில் இருந்து வருகின்ற பயணிகளிடம் மருத்துவ சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இத்தகைய நோய்த் தொற்று நுண்ணுயிர்களை ஆய்வு செய்வதற்கு, புனேவில் உள்ள தேசிய நுண்ணுயிர்கள் ஆய்வு நிறுவனத்தில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் 14 இடங்களில் உள்ள ஆய்வகங்களிலும் தொடக்கநிலை சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தேவையான கருவிகள், போதுமான அளவில் உள்ளன.

அனைத்து மாநில மொழிகளிலும் விழிப்புணர்வுப் பரப்புரைகள் செய்யப்படுகின்றன. வானொலி, தொலைக்காட்சிகளில் துறை சார்ந்த அறிஞர்கள் விளக்கம் அளித்து வருகின்றார்கள். மக்கள் நல்வாழ்வுத்துறை, செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறையின் சார்பில் நாள்தோறும் செய்தியாளர்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டு விளக்கம் அளிக்கப்படுகின்றது. சமூக வலைதளங்களிலும் பரப்புரைகள் செய்யப்படுகின்றன.

இந்தப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காகவே, 24 மணிநேரமும் இயங்குகின்ற ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான தொலைபேசி எண்: 011 23978046.

சுகாதாரத் துறை அமைச்சரின் தலைமையில், வெளியுறவுத்துறை, வான்வழிப் போக்குவரத்துத்துறை அமைச்சர்கள், உள்துறை மற்றும் சுகாதாரத் துறை, கப்பல் போக்குவரத்து இணை அமைச்சர்கள் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் முதல் கூட்டம், 03.02.2020 அன்று நடைபெற்றது.

மத்திய அரசின் செயலாளர், சுகாதாரத் துறை, பாதுகாப்பு, வெளியுறவு, வான்வழிப் போக்குவரத்து, உள்துறை, துணித்துறை, மருந்தகங்கள், வணிகத்துறை ஆகிய துறைகளின் அதிகாரிகளோடும், மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்களோடும், தொடர்ந்து தொடர்புகொண்டு, நோய்த்தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் ஒருங்கிணைத்து வருகின்றார்.

சுகாதாரத் துறை அமைச்சர், நாள்தோறும் இப்பணிகளைக் கண்காணித்து வருகின்றார். இரண்டு நாள்களுக்கு ஒருமுறை, மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்கள், சுகாதாரத் துறைச் செயலாளர்களுடன் காணொலி மூலம் கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு, அனைத்து வழிகளிலும் அரசு கண்காணித்து வருகின்றது".

இவ்வாறு சுகாதாரத் துறை இணை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x