Published : 05 Mar 2020 10:51 AM
Last Updated : 05 Mar 2020 10:51 AM

டி.கே.டி. பட்டா வைத்துள்ளவர்கள் அதை வணிகரீதியாக பயன்படுத்தினால் பறிமுதல்: கொடைக்கானலில் மாநில வருவாய்த்துறை செயலர் அதுல்யமிஸ்ரா தகவல்

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் டி.கே.டி., பட்டா விளைநிலங்களை வைத்துள்ளவர்கள் அதை வணிகரீதியாக பயன்படுத்தினால், அந்த இடம் பறிமுதல் செய்யப்படும் என, மாநில வருவாய்த்துறை செயலர் அதுல்யமிஸ்ரா தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மாநில வருவாய்த்துறை செயலர் அதுல்யமிஸ்ரா நேற்று ஆய்வு மேற்கொண்டார். கொடைக்கானல் நகரின் குடிநீர் ஆதாரமான மனோரத்தினம் சோலை நீர்த்தேக்கத்தில் மண் அணையின் கரையை வலுப்படுத்தி உயர்த்திக்கட்டும் பணிக்கான திட்டம் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

கொடைக்கானல் மலைப்பகுதியில் வருவாய்த்துறைக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தால் அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கொடைக்கானலில் ஏற்கனவே ரத்துசெய்யப்பட்ட போலி பட்டாக்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுவருகிறது. டி.கே.டி., பட்டா இடங்களை ஆக்கிரமித்து வைத்துள்ளவர்கள் (விவசாயத்தை ஊக்குவிக்கும் பொருட்டு மலைவாழ் மக்களுக்கு அரசால் இலவசமாக வழங்கப்பட்டது) அதனை வணிகரீதியாகப் பயன்படுத்தினால் அந்த இடம் பறிமுதல் செய்யப்படும், என்றார். ஆய்வின்போது கொடைக்கானல் கோட்டாட்சியர் (பொறுப்பு) சிவக்குமார், நகராட்சி ஆணையாளர் நாரயணன்,

வட்டாட்சியர் வில்சன்தேவதாஸ் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

முன்னதாக பழநி அருகேயுள்ள பெரியம்மாபட்டியில் நிலஉச்சவரம்பு சட்டத்தில் தமிழக அரசு கையகப்படுத்திய நிலங்களை நிலமற்ற ஏழைகளுக்கு வழங்குவது குறித்து மாநில வருவாய்த்துறை செயலர் அதுல்யமிஸ்ரா ஆய்வு மேற்கொண்டார்.

விண்ணப்பித்துள்ளவர்கள் உண்மையான பயனாளிகளா என்றும் நேரில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து பழநியில் வருவாய்த்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இதில் திண்டுக்கல் ஆட்சியர் மு.விஜயலட்சுமி, மாவட்ட வருவாய் அலுவலர்(பொறுப்பு) கந்தசாமி உள்ளிட்ட வருவாய் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைய எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு எடுத்துரைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x