

மனிதக் கழிவுகளை மனிதனே அகற்ற அனுமதிக்கும் வீட்டு உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என உடுமலை நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடுமலையில் நேற்று முன் தினம் நடைபெற்ற விழிப்புணர்வுகூட்டத்துக்கு நகராட்சிப் பொறி யாளர் எம்.தங்கராஜ் தலைமை வகித்தார். அதில் செப்டிக் டேங்க் வாகனம் இயக்கும் உரிமையாளர்கள், அதன் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும்தொழிலாளர்கள் அணிய வேண்டிய பாதுகாப்பு உபகரணங்கள் குறித்தும், உயிர் பாதுகாப்பு குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது.
செப்டிக் டேங்க் வாகனங்களை நகராட்சியில் முறையாக பதிவு செய்து, காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே இயக்க வேண்டும்.
நேரடியாக மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றுவது கண்டறியப் பட்டால், அகற்றும் பணியாளருக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும். வீட்டு உரிமையாளர் மற்றும் ஒப்பந்ததாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் மற்றும் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கவும், விதி மீறல்களுக்கு ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் சட்டரீதியான வழிவகை உள்ளது என தெரிவிக்கப்பட்டது.
இதில் நகர்நல அலுவலர் (பொ) எம்.சிவக்குமார், சுகாதார ஆய்வாளர்கள் ஆர்.செல்வம், பி.செல்வம், ஏ.செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.