Published : 05 Mar 2020 08:52 AM
Last Updated : 05 Mar 2020 08:52 AM

புராதான சின்னத்துக்கும் நினைவு சின்னத்துக்கும் உள்ள வித்தியாசம் ஸ்டாலினுக்குத் தெரியவில்லை: அமைச்சர் பாண்டியராஜன் விமர்சனம்

மு.க.ஸ்டாலின் - அமைச்சர் பாண்டியராஜன்: கோப்புப்படம்

கிருஷ்ணகிரி

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு புராதான சின்னங்களுக்கும் நினைவு சின்னங்களுக்கும் வித்தியாசம் தெரியவில்லை என, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் விமர்சித்துள்ளார்.

தமிழக நினைவுச் சின்னங்கள், கோயில்களை மத்திய அரசு கைப்பற்ற முயற்சி நடப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் குற்றம்சாட்டியிருந்தார். இதே குற்றச்சாட்டை மதிமுக உள்ளிட்ட கட்சிகளும் எழுப்பின.

இந்நிலையில், கிருஷ்ணகிரியில் நேற்று (மார்ச் 4) இதுகுறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பாண்டியராஜன், "எந்தவித ஆதாரமும் அடிப்படையும் இல்லாத குற்றச்சாட்டு. முதல்வர் பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்கு மக்களின் ஆதரவு பெருகி வருவதை ஸ்டாலினால் சகித்துக்கொள்ள முடியவில்லை என நினைக்கிறேன். அவருடைய அறிக்கை, வார்த்தை ரீதியாகவும் அர்த்தம் ரீதியாகவும் தவறானது.

புராதானங்கள் குறித்து மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் படேல் பேசினார். ஆனால், மு.க.ஸ்டாலின் நினைவு சின்னங்கள் குறித்துப் பேசுகிறார். நினைவுச் சின்னங்கள் இறந்தவர்களை பெருமைப்படுத்துவதற்காக கட்டுவது. அதனை ஸ்டாலின் குறிப்பிடுகிறார். அதைக்கூட வார்த்தைப் பிழை என எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அர்த்தம் இன்றி அனர்த்தமாக இருக்கிறது.

இந்தியா முழுக்க 3,691 புராதானச் சின்னங்களை மத்திய தொல்லியல் துறை நிர்வகித்து வருகிறது. இதில் தமிழகத்தில் 413 சின்னங்களை மத்திய தொல்லியல் துறை பராமாரித்து வருகிறது.

நன்றாக செயல்படும் கோயில்களை மத்திய அரசு எடுத்துக்கொள்ளும் என்பது பீதியைக் கிளப்புவது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தஞ்சை பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம் ஆகியவற்றை மத்திய தொல்லியல் துறை கட்டுக்குள் கொண்டு வர முயற்சிகள் நடந்தபோது அதனை தடுத்தது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி.

எந்த சூழ்நிலையிலும் எந்தவொரு கோயிலையும் மத்திய தொல்லியல் துறை கேட்கவும் இல்லை, நாம் கொடுக்க வேண்டிய கேள்வியும் எழவில்லை" என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x