புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விக் தயாரிக்க கல்லூரி மாணவிகள் 1,300 பேர் தலைமுடியை தானமாக வழங்கினர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விக் தயாரித்து இலவசமாக வழங்கும் நோக்கத்துக்கு உதவும் வகையில், திருச்சியில் நேற்று தங்களின் தலைமுடியை தானமாக வழங்கும் காவேரி மகளிர் கல்லூரி மாணவிகள்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விக் தயாரித்து இலவசமாக வழங்கும் நோக்கத்துக்கு உதவும் வகையில், திருச்சியில் நேற்று தங்களின் தலைமுடியை தானமாக வழங்கும் காவேரி மகளிர் கல்லூரி மாணவிகள்.
Updated on
1 min read

புற்றுநோய் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் பிப்.4-ம் தேதி புற்றுநோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இதையொட்டி, தனியார் நிறுவனம் சார்பில் திருச்சியில் முதல் முறையாக தலைமுடி தானம் பெறும் முகாம் நேற்று நடைபெற்றது. திருச்சி காவேரி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 1,300 மாணவிகள் தங்கள் தலைமுடியில் ஒரு பகுதியைத் தானமாக வழங்கினர்.

இதுகுறித்து தானம் பெற்ற நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி தீபக் பிரவீன் கூறியது: கடந்த 4 ஆண்டுகளாக பிப்.4 முதல் மார்ச் 4-ம் தேதி வரை என ஒரு மாத காலத்துக்கு, எங்கள் நிறுவன கடைக்கு வரும் வாடிக்கையாளர்களில், சம்மதம் தெரிவிப்போரிடம் இருந்து தலைமுடியை தானமாகப் பெற்று, புற்றுநோயாளிகளுக்கு விக் தயாரித்து, அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தில் உள்ள எளிய மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறோம். தலைமுடியை தானம் அளிக்க விரும்புவோர், நாட்டில் உள்ள 400 மையங்களிலும் எந்த நாளிலும் தானம் அளிக்கலாம்.

சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் பெரிய அளவில் முகாம் நடத்தி, தலைமுடி தானம் பெறப்பட்ட நிலையில், முதல் முறையாக திருச்சியில் முகாம் நடத்தி 1,300 மாணவிகளிடம் இருந்து தலைமுடியை தானம் பெற்றுள்ளோம். குறைந்தபட்சம் 10 இன்ச் நீள முடியை மட்டுமே தானம் பெறுகிறோம் என்றார்.

தலைமுடியை தானமாக தந்த மாணவிகள் சிலர் கூறும்போது, “சிறந்த நோக்கத்துக்காக தலைமுடியைத் தானமாக வழங்கியதில் மகிழ்ச்சி அடைகிறோம்” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in