

சிவகாசியைச் சேர்ந்த கார்த்தி என்பவர் வாரம் இருமுறை வெளி வரும் இதழ் ஒன்றில் செய்தியாளராகப் பணிபுரிகிறார். நேற்று முன்தினம் இவர் எழுதிய கட்டுரையில்அமைச்சர் கே.டி.ரஜேந்திரபாலாஜிக்கும், சாத்தூர் எம்.எல்.ஏ.ராஜவர்மனுக்கும் இடையே உட்கட்சி பூசல் நிலவி வருவதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சிவகாசி பாவாடித் தோப்பு அருகே பிரபல ஓட்டல் முன்பு நின்று கொண்டிருந்த கார்த்தியை 4 பேர் திடீரென சூழ்ந்து கொண்டு இரும்புக் கம்பியால் சரமாரியாகத் தாக்கிவிட்டு தப்பினர். இதில் தலை மற்றும் முகத்தில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக அவர் சிவகாசி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து கூடுதல் எஸ்.பி. மாரிராஜன் கூறும்போது, தாக்குதல் நடத்திய 2 பேரை பிடித்து விசாரித்து வருகிறோம்.
அவர்கள் அதிமுகவைச் சேர்ந்தவர்கள். அமைச்சர் மற்றும் எம்எல்ஏவை கேலி செய்து சித்திரம் வெளியிட்டதால் ஆத்திரமடைந்து செய்தியாளரை அவர்கள் தாக்கி உள்ளனர் என தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த சம்பவத்தைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர்அலுவலகம் முன்பு பத்திரிகையாளர் சங்கம் சார்பில் நேற்றுஆர்ப்பாட்டம் நடந்தது. மேலும் தாக்குதல் நடத்தியவர்கள், தாக்குதலுக்குத் தூண்டியவர்கள் மீது நடவடிக்கை கோரி விருதுநகர் ஆட்சியர் இரா.கண்ணன், கூடுதல் எஸ்.பி.யிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஜனநாயக விரோதச் செயல்: பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்
செய்தியாளர் கார்த்தி தாக்கப்பட்டது குறித்து விருதுநகர் மாவட்ட பத்திரிகையாளர் சங்கத் தலைவர் நாகராஜன் கூறும் போது, விருதுநகர் மாவட்டத்தில் பத்திரிகையாளர்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இரு தரப்பினரி டையேயும் தகவல் கேட்டு செய்தி வெளியிட்ட பிறகும் செய்தி யாளர் கார்த்தி தாக்கப்பட்டுள்ளார். இது ஜனநாயக விரோத செயல் ஆகும். செய்தி வெளியிட்டதற்காக செய்தியாளர் கார்த்தியை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணனிடமும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாளிடமும் விருதுநகர் மாவட்ட பத்திரிகையாளர் சங்கம் சார்பில் மனு தந்துள்ளோம் என்றார்.