

ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி வளையபாளையம் பகுதியை சேர்ந்த எஸ்.சிவசக்தி(29), திருப்பூர் மாநகர் நல்லூரில் வருவாய் ஆய்வாளராக பணி செய்து வருகிறார்.
இவர், காங்கயம் சாலையில் நேற்று காலை கண்காணிப்புப் பணியில் இருந்தபோது, கிராவல் மண் கடத்தி வந்த 2 லாரிகளை நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளார். லாரிகளுக்கு உரிய உரிமம் இல்லாதது தெரியவந்துள்ளது.
விசாரித்துக் கொண்டிருக்கும்போதே சம்பவ இடத்துக்கு வந்த லாரியின் உரிமையாளர், அவரது மகன் மற்றும் லாரி ஓட்டுநர்கள் இருவர், வருவாய் ஆய்வாளரை தாக்கியுள்ளனர். பொதுமக்கள் கூடியதால், லாரியிலிருந்த மண்ணை சாலையோரத்தில் கொட்டிவிட்டு, அங்கிருந்து தப்பினர். மேலும் காரில் புறப்பட்டுச் செல்ல முயன்ற உரிமையாளரை வருவாய் ஆய்வாளர் தடுக்க முற்பட்டபோது, அவரது காலில் காரை ஏற்றிச் சென்றனர். காயமடைந்த வருவாய் ஆய்வாளர் நல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார்.
2 பேர் தலைமறைவு
சிவசக்தி அளித்த புகாரின் பேரில் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவுசெய்யப்பட்டு, லாரி உரிமையாளரான கொடுவாயைச் சேர்ந்த எம்.சுப்புக்குட்டி (56), லாரி ஓட்டுநரான தாராபுரத்தை சேர்ந்த சதீஷ்குமார் (25) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவான சுப்புக்குட்டியின் மகன், மற்றொரு லாரி ஓட்டுநரான இளங்கோ ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.