Published : 05 Mar 2020 08:31 AM
Last Updated : 05 Mar 2020 08:31 AM

வேகமாக பரவும் கோவிட்-19 வைரஸ் காய்ச்சல்- வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை கண்காணிக்க கூடுதல் மருத்துவக் குழுக்கள்

இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் (கரோனா) வேகமாக பரவி வருவதால் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளை பரிசோதனை செய்ய கூடுதலாக மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 1 லட்சம் பயணிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கோவிட்-19 (கரோனா) வைரஸ் காய்ச்சல், சீனாவைத் தொடர்ந்து 70-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்தவைரஸால் இதுவரை 92 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சலின் தீவிரத்தால் 3,200-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் ஏற்கெனவே கேரள மாநிலத்தில் 3 பேருக்கு இந்த வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது இத்தாலியைச் சேர்ந்த 16 பேர் உட்பட 28 பேருக்குகோவிட்-19 பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர 40 பேருக்கு இதற்கான அறிகுறிகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதையடுத்து, நாடுமுழுவதும் அனைத்து விமான நிலையங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை விமானநிலையங்களில் இதற்காக அமைக்கப்பட்டுள்ள மருத்துவக் குழுவினர், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வைரஸ் பாதிப்புள்ள சீனா, தாய்லாந்து, சிங்கப்பூர், ஜப்பான், தென்கொரியா, நேபாளம், இந்தோனேஷியா, மலேசியா, வியட்நாம், இத்தாலி, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும்முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் நேற்றுஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘‘சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்கள் விமான நிலையங்களில் தீவிர பரிசோதனை செய்யப்படுகின்றனர். கோவிட்-19வைரஸ் காய்ச்சல் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், விமான நிலையங்களில் கூடுதலாக மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. துறைமுகங்களிலும் மருத்துவக் குழுக்கள் பணியில் உள்ளன. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 1 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர்’’ என்றார்.

சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘சென்னை அரசுபொது மருத்துவமனை உட்படதமிழகம் முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சைக்கான உபகரணங்களுடன் சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் உள்ளன. மாவட்ட ஆட்சியர்கள் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. மக்கள் பொது இடங்களுக்கு சென்று வந்தவுடன் கைகளை சோப்பு போட்டு நன்கு கழுவ வேண்டும். இருமும் போதும், தும்மும்போதும்முகத்தை கைக்குட்டை கொண்டு மூடிக் கொள்ள வேண்டும்.

கைகளை கழுவாமல் மூக்கு,வாய் மற்றும் கண்களை தொடக்கூடாது. காய்ச்சல், இருமல், தும்மல்இருப்பவர்களிடம் இருந்து சற்றுவிலகி இருக்க வேண்டும்.அசைவ உணவு உண்பவர்கள், அவற்றை நன்கு வேகவைத்த பிறகு சாப்பிட வேண்டும். கரோனாவைரஸ் காய்ச்சல் பாதிப்புள்ள நாடுகளுக்கு பயணம் செல்வதை தவிர்க்க வேண்டும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x