

சங்கரன்கோவில் அருகே உள்ள வீரிருப்பு கிராமத்தில் 100 அடி உயர உலக அமைதி புத்த விஹாரம் கட்டும் பணி, 10 ஆண்டுகளாக நடைபெற்றது. பணிகள் முடிவடைந்த நிலையில், கோபுர உச்சியில் வைப்பதற்காக கடந்தமே மாதம் ஜப்பானிலிருந்து புத்தர் அஸ்தி கொண்டுவரப்பட்டது.
புத்தர் அஸ்தி அடங்கிய கலசத்தை கோபுர உச்சியில் வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்தியாவுக்கான மங்கோலிய தூதர் கன்பொல்ட், நிப்பொன்சன் மியொஹொஜி அமைப்பின் தமிழ்நாடுதலைவர் கனகசபாபதி மற்றும் புத்த துறவிகளின் முன்னிலையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
பின்னர், உலக அமைதி கோபுரத்தில் புத்தர் அஸ்தி காலை 10.31 மணிக்கு வைக்கப்பட்டது. அஸ்தி கலசம் வெளியே தெரியாதவாறு கட்டுமானத்தால் மூடப்பட்டது. பிஹார் மாநிலம் ராஜ்கீர் நிப்பொன்சன் மியொஹொஜி அமைப்பைச் சேர்ந்த ஓகோனோகி சோனின்,ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மருத்துவர் கக்கி சசிகோ ஆகியோர் பேசினர்.
இந்தியாவுக்கான மங்கோலிய தூதர் கன்பொல்ட் கூறும்போது, “2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மங்கோலியாவில் புத்த மதம் பரவியது. இந்தியாவில் இருந்து புத்தரை பற்றி அறிந்துகொண்ட மங்கோலியர்கள் புத்தரை பின்பற்றத் தொடங்கினர். புத்தரின் கருத்துகளை பின்பற்றினால் அனைவரும் அமைதியாக வாழலாம்” என்றார்.
புத்தர் கோயில் கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய வீரிருப்பு முத்தையா குடும்பத்தினர், முன்னாள் அமைச்சர் தங்கவேல், வேல்ஸ் குழும தலைவர் சண்முகசாமி, மருத்துவர் சுப்பாராஜ், தொழிலதிபர் பிரேம்குமார், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பேராசிரியர் நந்தகுமார், வழக்கறிஞர் மருதப்பன், வீரிருப்பு புத்தர் விஹாரம் நிர்வாக அறங்காவலர் துறவி லீலாவதி மற்றும் ஜப்பான், வியட்நாம், தாய்லாந்து மற்றும் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து புத்த துறவிகள் கலந்துகொண்டனர்.
நிப்பொன்சன் மியொஹொஜி அமைப்பின் தென்னிந்திய தலைவர் இஸ்தாணி, புத்த துறவி கிமுரா ஆகியோர் நன்றி கூறினர்.