

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, மயங்கியிருந்த கல்லூரி மாணவியை பாலியல் வன் கொடுமை செய்ததாக திரைப்பட நடிகர் கைது செய்யப் பட்டார்.
புதுவண்ணாரப்பேட்டை யைச் சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க மாணவி ஒருவர் சென்னையில் உள்ள மகளிர் கல்லூரி ஒன்றில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி தோழி மூலம் ஒரு வருடத்துக்கு முன்னர் சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த விஜய் ஹரீஸ் (25) என்பவரது அறிமுகம் ஏற்பட்டது.
இந்நிலையில், கடந்த 2-ம் தேதி மாணவியை காதலிப்பதாகக் கூறி விஜய் ஹரீஸ் விருகம்பாக்கத்தில் உள்ள அறை ஒன்றுக்கு அழைத்து சென்றார். அங்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்தார். அதை குடித்த சிறிது நேரத்தில் மயங்கிய மாணவியை விஜய் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அதை புகைப்படமாக எடுத்துக் கொண்டு அழைக்கும்போது வரவில்லை என்றால் சம்பந்தப்பட்ட புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டினாராம்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி இதுகுறித்து திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆய்வாளர் சுகுனா வழக்குப் பதிந்து விஜய் ஹரீஸை நேற்று கைது செய்தார். கைது செய்யப்பட்ட விஜய் ஹரீஸ் ‘நாங்களும் நல்லவுங்கதான்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.