

பாரம்பரிய இயற்கை விவசாயத்தில் விளைந்த பங்கனப்பள்ளி, அல்போன்சா, இமாம்பசந்த் உள்ளிட்ட மாம்பழ ரகங்கள் அரபு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு முதன்முறையாக ஏற்றுமதி செய்யப்பட உள்ளன.
தமிழகம் முழுவதும் பரவலாக மாம்பழம் சாகுபடி நடைபெற்றாலும், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவள்ளூர், காஞ்சிபுரம், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த 2016-17-ம் ஆண்டு 1.39 லட்சம் எக்டேரில் (ஒரு எக்டேர் 2.5 ஏக்கர்) மாம்பழ சாகுபடி நடைபெற்றது. அடுத்த ஆண்டு வறட்சி காரணமாக சாகுபடி பரப்பு 1.36 லட்சம் எக்டேராக குறைந்தது. 2018-19-ம் ஆண்டு மாம்பழ சாகுபடி பரப்பு 1.42 லட்சம் எக்டேராக அதிகரித்தது.
தமிழகத்தில் பங்கனப்பள்ளி (ராஜபாளையம் சப்போட்டா), அல்போன்சா, ஜவாரி, இமாம்பசந்த், பெங்களூரா (கிளி மூக்கு) போன்ற மாம்பழ ரகங்கள் அதிக அளவில் விளைவிக்கப்படுகின்றன. ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தி விளைவிக்கப்படும் மாம்பழங்கள் ஆண்டுக்கு ஆயிரம் மெட்ரிக் டன்னும், மாம்பழ ஜூஸ் 20 ஆயிரம் மெட்ரிக் டன்னும், சென்னை, கொச்சி, மும்பை துறைமுகங்கள் வழியாக அரபு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.
இனிப்பு மட்டுமல்லாமல் புளிப்பு, மணம் நிறைந்த மாம்பழங்களையே வெளிநாட்டினர் அதிகம் விரும்புகின்றனர். அதனால் அதுபோன்ற மாம்பழ ரகங்களைத் தேர்வு செய்து, கொள்முதல் செய்யும் வணிகர்கள், அவற்றை குளிர்பதனக் கிடங்கில் இருப்பு வைத்து, ஆண்டு முழுவதும் உள்ளூர் சந்தையில் ப்ரூட்டீ, மாசா போன்ற மாம்பழ ஜூஸாக கிடைக்கச் செய்வதுடன், ஏற்றுமதியும் செய்கின்றனர்.
இதற்கிடையே, இயற்கை விவசாயத்தில் விளையும் மாம்பழங்களுக்கு அண்மைக் காலமாக அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளதோடு ஏற்றுமதி வாய்ப்பும் அதிகரித்துள்ளது. இதனால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவிரிப்பட்டினம், பர்கூர், மத்தூர் ஆகிய வட்டாரங்களில் சுமார் ஆயிரம் எக்டேரில் பாரம்பரிய இயற்கை விவசாய முறையில் மாம்பழம் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும், மாம்பழ ஏற்றுமதியில் விவசாயிகளை ஊக்குவிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
மண்வள பரிசோதனை
இதுகுறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவிரிப்பட்டினம் உட்பட 3 வட்டாரங்களில் சுமார் ஆயிரம் எக்டேரில் இயற்கை விவசாய முறையில் மாம்பழம் விளைவிக்கப்படுகிறது. இதற்காக முதலில் மண்வள பரிசோதனை செய்து, நிலம் தயார் செய்யப்பட்டது. அருகில் ரசாயனம், பூச்சிக் கொல்லி மருந்து பயன்படுத்தும் நிலத்தில் இருந்து இயற்கை விவசாயத்துக்காக தயார் செய்யப்பட்ட நிலத்துக்குள் தண்ணீர் வந்துவிடக்கூடாது என்பதற்காக நான்கு புறமும் பள்ளம் தோண்டி, இயற்கை விவசாயத்துக்கான நிலம் தனியாகப் பிரிக்கப்பட்டது.
அந்த நிலத்தில் விளையும் மாம்பழங்கள் முதன்முறையாக இந்த ஆண்டு முதல் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதற்காக தலா 20 பேர் கொண்ட 50 விவசாயிகள் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இக்குழுக்கள் உற்பத்தி செய்யும் மாம்பழங்கள், தரப் பரிசோதனைக்குப் பிறகு, ‘Paramparagat Krishi Vikas Yojana' (PKVY) என்ற முத்திரை மற்றும் ‘பார்கோடு’டன் ஏற்றுமதி செய்யப்பட உள்ளன.
உள்ளூர் சந்தையில் மொத்த விலைக்கு இமாம்பசந்த் கிலோ ரூ.80, பங்கனப்பள்ளி ரூ.25 முதல் ரூ.30, அல்போன்சா ரூ.40, மல்கோவா கிலோ ரூ.60-க்கு விற்கப்படுகின்றன. இந்த மாம்பழங்கள் ஒன்றரை மடங்கு கூடுதல் விலையுடன் ஏற்றுமதி செய்யப்படும். இதனால் விவசாயிகளின் வருவாய் அதிகரிக்கும். முதல்கட்டமாக சுமார் 4 ஆயிரம் மெட்ரிக் டன் மாம்பழங்கள், கிருஷ்ணகிரியில் இருந்து விரைவில் ஏற்றுமதி செய்யப்பட உள்ளன.இவ்வாறு அவர்கள் கூறினர்.