Published : 05 Mar 2020 07:32 AM
Last Updated : 05 Mar 2020 07:32 AM

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனுடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு: கிருஷ்ணா நதிநீரை கூடுதலாக விடுவிக்க கோரிக்கை

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார் ஆகியோர் நேற்று சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது கிருஷ்ணா நதிநீரை கூடுதலாக விடுவிக்குமாறும், கோதாவரி- காவிரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த ஒத்துழைப்பு வழங்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.

கோதாவரி ஆற்றில் இருந்து கிருஷ்ணா நதிநீர் வழியாக காவிரிக்கு உபரிநீரை திருப்பும் கோதாவரி- காவிரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த மத்தியஅரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இத்திட்டம் மூலம்தமிழகத்துக்கு 700 டிஎம்சி நீரைகொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த திட்டத்தைசெயல்படுத்த ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களின் ஒத்துழைப்புதேவைப்படுகிறது. இரு மாநிலங்களிடமும் திட்டத்துக்கான ஒத்துழைப்பை பெற தமிழக அரசு தற்போது முயற்சித்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் டி.ஜெயக்குமார் ஆகியோர் நேற்று ஆந்திரா புறப்பட்டுச் சென்றனர். விஜயவாடாவில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து, முதல்வர் பழனிசாமி அளித்த கடிதத்தை கொடுத்தனர். அதில், கோதாவரி- காவிரி இணைப்பு திட்டத்தை கிருஷ்ணா நதிநீர் வழியாக செயல்படுத்துவது குறித்த கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன. இந்த சந்திப்பின்போது, தமிழக பொதுப்பணித் துறை செயலர் கே.மணிவாசன், பாலாறு வடிநில கண்காணிப்பு பொறியாளர் முத்தையா, தெலுங்கு கங்கை திட்ட செயற்பொறியாளர் ஹென்றி ஜார்ஜ் ஆகியோர் உடன் இருந்தனர். கோடைகாலத்தில் சென்னையின் குடிநீர் தேவையை சமாளிக்க கூடுதலாக 3 டிஎம்சி கிருஷ்ணா நீரை திறந்து விட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதைதொடர்ந்து தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை இன்று சந்திக்கும் தமிழக அமைச்சர்கள் கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்துக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கோரிக்கை வைக்கவுள்ளனர்.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளில் மொத்த கொள்ளளவான 11,257 மில்லியன் கன அடியில் தற்பாது 6,157 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. இருப்பினும், தினசரி விநியோகம் மற்றும் வெப்பநிலை அதிகரிப்பால் தொடர்ந்து நீர் இருப்பு குறைந்து வருகிறது. இந்நிலையில் கிருஷ்ணா நீரை கூடுதலாக பெற தமிழக அரசு முயற்சி எடுத்து வருகிறது. முன்னதாக கடந்த ஆண்டு சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், ஆகஸ்ட் 9-ம் தேதி ஜெகன்மோகன் ரெட்டியை அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார் ஆகியோர் சந்தித்து கிருஷ்ணா நதி நீரை திறந்துவிட கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து அவர், உடனடியாக தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டார். அப்போது முதல் கிருஷ்ணா நீர் தமிழகத்துக்கு வந்து கொண்டிருக்கிறது. இதுவரை 6 ஆயிரத்து 145 மில்லியன் கன அடி நீர் சென்னைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x