Last Updated : 04 Mar, 2020 08:41 PM

 

Published : 04 Mar 2020 08:41 PM
Last Updated : 04 Mar 2020 08:41 PM

அதிமுக முன்னாள் எம்.பி.க்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை: வங்கிக் கடன் மோசடி வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

வங்கிக் கடன் மோசடி வழக்கில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்.பி. கே.என்.ராமச்சந்திரனுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இவர் கண்ணம்மாள் கல்வி அறக்கட்டளையின் தலைவரும் நிர்வாகப் பொருளாளருமாக இருந்தார். சிபிஐ பதிவு செய்த இந்த வழக்கில் மேலும் இருவருக்கும் சிறைத்தண்டனை விதித்தது சிறப்பு நீதிமன்றம்.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்.பி. கே.என்.ராமச்சந்திரன், தனக்குச் சொந்தமான கல்லூரி விரிவாக்கத்திற்கு வங்கியில் ரூ. 20 கோடி கடன் கேட்டுள்ளார். ஆனால், போதிய ஆவணங்கள் அவரிடம் இல்லை என்று கூறி வங்கி அதிகாரிகள் முதலில் நிராகரித்துள்ளனர். பின்னர் ராமச்சந்திரன், வங்கி மேலாளர் தியாகராஜனுக்கு லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்பட்டது.

இது தொடர்பான புகாரில், ராமச்சந்திரன், அவரது மகன் ராஜசேகரன், வங்கி மேலாளர் தியாகராஜன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது. பிறகு வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.

இதனையடுத்து எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்ட பிறகு வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

விசாரணை முடிவடைந்த நிலையில், சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி லிங்கேஸ்வரன் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளார். கடன் மோசடி வழக்கில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்.பி. கே.என்.ராமச்சந்திரன் குற்றவாளி என இன்று காலை தீர்ப்பு வழங்கப்பட நிலையில் தண்டனை விபரங்கள் இன்று பிற்பகல் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, முதல் குற்றவாளியான வங்கி மேலாளர் தியாகராஜனுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.13.10 லட்சம் அபராதமும் இரண்டாம் மற்றும் மூன்றாம் குற்றவாளியான ராமச்சந்திரன், அவரது மகன் ராஜசேகரனுக்கு தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும் ரூ.1.11 கோடி அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இவர்கள் மூவரும் சென்னை புழல் சிறைக்கு அனுப்பப்படவுள்ளனர். 4வது குற்றவாளியான கண்ணம்மாள் கல்வி அறக்கட்டளைக்கு ரூ.15.20 கோடி அபராதம் விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கே.என்.ராமச்சந்திரன், கடந்த 2014 முதல் 2019 வரை ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்.பியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x