

மதுரை சித்திரைத் திருவிழாவுக்கு வைகை அணையில் இருந்து 216 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளது.
மதுரையில் ஆண்டுதோறும் கோயில் திருவிழாக்கள் நடந்தாலும் சித்திரைத் திருவிழா மிகுந்த விஷேசமானது.
மீனாட்சியம்மன் கோயில் பட்டாபிஷேகம், தேரோட்டம், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது உள்ளிட்ட நிகழ்வுகளைக் காண மதுரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள்.
கடந்த காலத்தில் கள்ளழகர் ஆற்றில் இறங்குவதற்கு வைகை ஆற்றில் ஆண்டு முழுவதும் இரு கரைகளையும் தொட்டப்படி நீரோட்டம் காணப்பட்டது.
ஆனால், கால் நூற்றாண்டாக வைகை ஆற்றில் மழைக்காலத்தில் மட்டுமே நீரோட்டம் காணப்படுகிறது. மற்ற காலங்களில் வைகை வறட்சிக்கு இலக்காகி கழிவு நீர் மட்டுமே ஓடுகிறது.
அதனால், சித்திரைத்திருவிழா காலங்களில் முக்கிய விஷேசமான நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்குவதற்கு வைகை ஆணையில் 2 நாட்கள் தண்ணீர் திறந்துவிடப்படும். வைகை அணையில் தண்ணீர் இல்லாவிட்டால் ஆற்றில் தொட்டி கட்டி லாரி தண்ணீரை நிரப்பி அதில் கள்ளழகர் ஆற்றில் இறங்குவார்.
ஆனால், தற்போது வைகை அணை நீர் மட்டம் 44 அடியாக உள்ளதால் சித்திரைத் திருவிழாவுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.
இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘சித்திரைத்திருவிழாவுக்கு இந்த ஆண்டு வைகை அணையில் இருந்து 216 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
இதற்காக தமிழக அரசு ஒப்புதலுக்காக கடிதம் அனுப்பி உள்ளோம். ஒப்புதல் கிடைத்தவுடன் சித்திரைத்திருவிழாவுக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்.
அணையில் போதுமான தண்ணீர் இருப்பதால் ஜூன் மாதம் வரை மதுரை மாநகராட்சியின் குடிநீருக்கு எந்த பாதிப்பும் இருக்காது. அதற்குள் தென்மேற்கு பருவமழை பெய்துவிடும் என்பதால் வைகை அணை நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது, ’’ என்றனர்.