

நெல்லை ஏர்வாடி அங்காள பரமேஸ்வரி கோவிலுக்கு திருவிதாங்கூர் மன்னர் தானமாக வழங்கிய மரகத விநாயகர் மற்றும் நகைகளை மீட்கக்கோரிய வழக்கில் அறநிலையத்துறை இணை ஆணையர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மேலப்பாளையம் குறிச்சியை சேர்ந்த டி.முத்துகுமாரசாமி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "நாங்குநேரி தாலுகா ஏர்வாடி பொத்தையடியில் குருநாத சித்தரால் 400 ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது.
இந்த கோயிலுக்கு அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் ஏர்வாடி, திருக்குறங்குடி, வள்ளியூர் பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கர் நிலம், தங்க, வைர நகைகள், ரூ.300 கோடி மதிப்புள்ள மரக விநாயகர் சிலையை தானமாக வழங்கினார். ஆற்காடு நவாபும் ஏராளமான நகைகளை கோயிலுக்கு தானமாக வழங்கினார்.
இந்த நிலங்களில் இருந்து வரும் வருமானம் கோவியில் நிர்வாகத்துக்கும், பூஜைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
கோயில் நகைகள் ஒவ்வொரு சிவராத்திரியின் போதும் சாமிக்கு அணிவிக்கப்படும். 70 ஆண்டுக்கு முன்பு கோவில் நிர்வாகத்தைக் கைப்பற்றுவதில் சிலருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் கோயில் நகைகளும், மரக விநாயகர் சிலையும் ஏர்வாடி அருள்மிகு திருவழுதீஸ்வரர் கோயில் செயல் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆனால், அங்காள பரமேஸ்வரி கோயில் நிர்வாகக் குழுவினரும், அறநிலையத்துறை அதிகாரிகளும் சேர்ந்து கோயிலுக்குச் சொந்தமான நகைகளை தங்களின் சொந்த தேவைக்குப் பயன்படுத்தி வருகின்றனர்.
எனவே கோயிலுக்குச் சொந்தமான தங்கம், வைர நகைகள் மற்றும் ரூ.300 கோடி மதிப்புள்ள மரகத விநாயகர் சிலையை மீட்டு, அவைகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யவும், கோயில் நகைகள் மற்றும் மரகத விநாயகர் சிலையை ஒவ்வொரு மகாசிவராத்தியின் போது பொதுமக்களின் பார்வைக்கு வைக்கவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக நெல்லை அறநிலையத்துறை இணை ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 31-க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.