கூடங்குளம் அணுஉலை பாதுகாப்புப் பகுதியில் கல் குவாரி செயல்பட தடை கோரிய மனு தள்ளுபடி

கூடங்குளம் அணுஉலை பாதுகாப்புப் பகுதியில் கல் குவாரி செயல்பட தடை கோரிய மனு தள்ளுபடி
Updated on
1 min read

கூடங்குளம் அணுஉலை பாதுகாப்புப் பகுதியில் கல் குவாரி செயல்பட தடை கோரிய மனுவை உயர் நீதிமன்றம் மதுரை கிளை தள்ளுபடி செய்தது.

கூடங்குளம் அணுமின் நிலையம் அமைந்துள்ள பகுதியானது அணுஉலை பாதுகாப்புப் பகுதியாக இருக்கிறது. இதனைக் குறிப்பிட்டு அங்கு கல் குவாரிக்கு தடை விதிக்கக்கோரி தாக்கலான மனுவை உயர் நீதிமன்றம் மதுரை கிளை தள்ளுபடி செய்தது.

திருநெல்வேலி மாவட்டம் பொன்னார்குளத்தைச் சேர்ந்த செந்தூர் பாண்டி உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "கூடங்குளம் அணுமின் நிலையத்தைச் சுற்றிலும் 2 முதல் 5 கிலோ மீட்டர் வரையிலான பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதிக்குள் குவாரி நடத்த கூடங்குளம் உள்ளூர் திட்டக் குழுவிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

இந்த விதியை மீறி கூடங்குளத்தில் இருந்து 2 கி.மீட்டர் தூரத்தில் எருக்கன்துறையில் கல் குவாரி நடத்த நெல்லை மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியுள்ளார். எனவே கல் குவாரிக்கு தடை விதிக்க வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வில் இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வந்தது.

குவாரி தரப்பில், "கூடங்குளம் பாதுகாக்கப்பட்ட பகுதியிலிருந்து 6.2 கி.மீட்டர் தொலைவிலேயே குவாரி அமைந்துள்ளது. இதற்கு கூடங்குளம் உள்ளூர் திட்டக்குழுவிடம் ஒப்புதல் பெற வேண்டியதில்லை" எனத் தெரிவிக்கப்பட்டது. அதற்கான சான்றாவணங்களும் தாக்கல் செய்யப்பட்டன.

இதையேற்று மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in