Published : 04 Mar 2020 02:35 PM
Last Updated : 04 Mar 2020 02:35 PM

நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த புதிய ஆணையம்: முற்போக்கான முடிவு; ராமதாஸ் வரவேற்பு

நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த புதிய ஆணையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பது முற்போக்கான முடிவு என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, ராமதாஸ் இன்று (மார்ச் 4) வெளியிட்ட அறிக்கையில், "இந்தியாவில் நதிகள் இணைப்புத் திட்டங்களை செயல்படுத்துவதற்காக தேசிய நதிகள் இணைப்பு ஆணையம் என்ற புதிய அமைப்பை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. நதிகள் இணைப்புக்கு புதிய உத்வேகம் அளிக்கும் வகையிலான மத்திய அரசின் இந்த முடிவு முற்போக்கான ஒன்றாகும்.

பல்வேறு காலநிலை மண்டலங்களைக் கொண்ட இந்தியாவில் ஒரே காலகட்டத்தில் ஒரு பகுதியில் கடுமையான வெள்ளமும், மற்றொரு பகுதியில் கடுமையான வறட்சியும் நிலவுவது இயல்பானதாகும். இந்த நிலையை மாற்றும் நோக்குடனும், ஒரு பகுதியில் உபரியாக கிடைக்கும் தண்ணீரை இன்னொரு பகுதியின் தேவைக்கு பயன்படுத்திக்கொள்ளும் வகையிலும் நதிகளை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற யோசனை பல பத்தாண்டுகளுக்கு முன்பிருந்தே தெரிவிக்கப்பட்டு வருகிறது.

1999 ஆம் ஆண்டில் மூன்றாவது முறையாக பொறுப்பேற்ற வாஜ்பாய் அரசு நதிகள் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த தீர்மானித்து, அதற்காக சிறப்பு பணிக்குழு ஒன்றை முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தலைமையில் அமைத்தது. எனினும், முழுமையான அதிகாரம் கொண்ட அமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், 20 ஆண்டுகள் கழித்து தான் தேசிய நதிகள் இணைப்பு ஆணையம் என்ற பெயரில் புதிய அமைப்பு உருவாக்கப்படவிருக்கிறது.

தேசிய நதிகள் இணைப்பு ஆணையம் அமைக்கப்படுவதன் நோக்கமும், அந்த அமைப்புக்கு வழங்கப்பட உள்ள அதிகாரங்களும் போற்றத்தக்கவையாகும். இந்தியாவில் ஒரே மாநிலத்தில் ஓடும் நதிகளாக இருந்தாலும், இரு மாநிலங்களைச் சேர்ந்த நதிகளாக இருந்தாலும் அவற்றை இணைக்கும் திட்டத்தை இந்த அமைப்பு தான் செயல்படுத்தும்.

நதிகள் இணைப்புக்கான திட்ட அறிக்கைகளை தயாரிப்பது, நிதி திரட்டுவது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் இந்த அமைப்பே திரட்டும் என்றும், திட்டச் செலவில் 90 விழுக்காட்டை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும் என்றும், மீதமுள்ள 10 விழுக்காட்டை மட்டும் மாநில அரசுகள் ஏற்றுக் கொண்டால் போதுமானது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசுகளிடம் போதிய வருவாய் ஆதாரங்கள் இல்லாத நிலையில், திட்டச் செலவில் 90 விழுக்காட்டை மத்திய அரசே ஏற்றுக்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது மாநில அரசுகளுக்கு பெரிதும் நிம்மதியளிக்கும்.

அதேநேரத்தில், தேசிய நதிகள் இணைப்பு ஆணையம் அமைப்பது குறித்து மத்திய அமைச்சகங்களுக்கு இடையே ஒன்றரை ஆண்டுகளாக ஆலோசனை நடத்தப்பட்டு வரும் போதிலும், இன்னும் உறுதியான முடிவு எடுக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது. அதுமட்டுமின்றி, தேசிய நதிகள் இணைப்பு ஆணையத்தை அமைப்பதற்கு காலவரம்பு எதுவும் நியமிக்கப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்திருப்பதை வைத்துப் பார்க்கும்போது, இந்தத் திட்டம் விவாத அளவிலேயே இருந்து விடுமோ? என்ற ஐயம் எழுகிறது.

தேசிய நதிகள் இணைப்பு ஆணையம் என்பது இந்தியாவின் பிற மாநிலங்களை விட தமிழ்நாட்டுக்கு மிகவும் முக்கியமானதாகும். இந்தியாவில் இப்போது 6 நதிகள் இணைப்புத் திட்டம் செயல்பாட்டுக்கு தயாராக உள்ளது. அவற்றில் முக்கியமானது கோதாவரி - காவிரி இணைப்பு ஆகும். தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை கர்நாடகம் முறையாக திறந்து விடாத நிலையில், வருங்காலங்களில் காவிரி பாசன மாவட்டங்களில் தடையின்றி விவசாயம் நடைபெற வேண்டுமென்றால் கோதாவரி - காவிரி நதிகள் இணைப்பு எவ்வளவு விரைவாக நடத்தப்பட வேண்டுமோ, அவ்வளவு விரைவாக நடக்க வேண்டும்.

கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்திற்காக மகாநதியிலிருந்து உபரிநீரை எடுக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு ஒடிஷா அரசு ஒப்புக்கொள்ளாத நிலையில், கோதாவரி - காவிரி ஆறுகள் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த மட்டும் மத்திய நீர்வள அமைச்சகம் தீர்மானித்துள்ளது. அதற்கான திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவாக பணிகள் தொடங்கப்பட வேண்டும். ஆனால், ஆணையம் அமைக்கத் தாமதமாவதால் நதிகள் இணைப்பும் தாமதமாகக்கூடும்.

எனவே, தேசிய நதிகள் இணைப்பு ஆணையத்தை விரைந்து அமைக்க வேண்டும். ஒருவேளை ஆணையம் அமைக்கத் தாமதமாகும் என்றால், கோதாவரி - காவிரி நதிகள் இணைப்புத் திட்டத்தை மத்திய நீர்வள அமைச்சகமே நேரடியாக குறைந்த காலத்தில் செயல்படுத்தி முடிக்க முன்வர வேண்டும்" என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x