

கடந்த 6 நாட்களாக நடைபெற்று வந்த கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
நிலத்தடி நீர் எடுப்பதற்கான உரிமம் இல்லாமல் இயங்கும் கேன் குடிநீர் உற்பத்தி ஆலைகளை மூட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உரிமம் இல்லாத ஆலைகள் சீல் வைக்கப்பட்டு வருகின்றன. மாநிலம் முழுவதும் இதுவரை 350-க்கும் மேற்பட்ட ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, நிலத்தடி நீர் எடுப்பதற்கான உரிமத்தை எளிய முறையில் பெறுவதற்கான வழிமுறைகளை அரசு விரைவில் உருவாக்க வலியுறுத்தி கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் கடந்த 6 நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்காரணமாக தமிழகத்தில் பரவலாக கேன் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மட்டும் தினமும் 4 லட் சம் கேன் குடிநீர் விற்பனையாகிறது. இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால் சென்னையில் பன்னடுக்கு மாடி குடியிருப்புகள், வணிக வளாகங்களில் ஏற்பட்டுள்ள தட் டுப்பாட்டைச் சமாளிக்க சென்னை குடிநீர் வாரிய லாரி தண்ணீரை மக்கள் வாங்கி உபயோகிக்கத் தொடங்கினர்.
இந்நிலையில், கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் தங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை இன்று (மார்ச் 4) வாபஸ் பெற்றனர்.
இதுதொடர்பாக, கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் தரப்பில் கூறுகையில், "நிலத்தடி நீரை உறிஞ்சுவதாக குற்றம்சாட்டுகின்றனர். குடிநீருக்காக வேறு எங்கிருந்து தண்ணீர் எடுப்பது, வானத்தில் இருந்தா தண்ணீர் எடுக்க முடியும். அரசாங்கம் தண்ணீர் எடுத்தாலும் நிலத்தில் இருந்துதான் எடுக்க வேண்டும்.
ஐஎஸ்ஐ சான்று பெறாத போலி குடிநீர் வேண்டுமா, நல்ல குடிநீர் வேண்டுமா என்பதை அரசு முடிவு செய்ய வேண்டும். குடிநீருக்கான தேவையைக் கருதியே நிலத்தடி நீரை எடுக்கிறோம்.
வேலைநிறுத்தத்தால் தரமில்லாத போலிக் குடிநீர் விற்பனை அதிகரித்துள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது வருத்தத்திற்குரிய விஷயம். குடிநீர் ஆலைகள் வைத்திருப்போரை உரிமத்திற்காக விண்ணப்பிக்குமாறு அரசு கூறியிருக்கிறது. விண்ணப்பங்களை பரிசீலித்து 15-20 நாட்களுக்குள் உரிமம் வழங்கப்படும் என நம்புகிறோம். அதன் அடிப்படையில், இப்போது வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம்" என தெரிவித்தனர்.