

இலங்கை போர்க்குற்றங்களை உள்நாட்டு அளவில் விசாரித்தாலே போதுமானது என்று அமெரிக்கா கூறியதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் , “இலங்கை இறுதிப் போரின் போது நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக பன்னாட்டு விசாரணை தேவையில்லை என்றும் உள்நாட்டு விசாரணையே போதுமானது என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் நிஷா பிஸ்வால் கூறியுள்ளார்.
சீனாவுக்கு ஆதரவானவர் என்பதால், ராஜக்பக்சவை அதிகார பொறுப்பிலிருந்து நீக்குவதற்காக இலங்கைத் தமிழர் பிரச்சினையை கையிலெடுத்த அமெரிக்கா, தற்போது, தனக்கு சாதகமானவர்கள் ஆட்சிக்கு வந்ததும், தனது சொந்த முகத்தை காட்டுகிறது.
இலங்கை போர்க்குற்றத்துக்கு பன்னாட்டு விசாரணை தேவை என்பதை வலியுறுத்தி ஐ.நா. மனித உரிமை ஆணையருக்கு பசுமை தாயகம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்த மாதம் நடக்கவுள்ள ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டத்திலும் வலியுறுத்துவோம்” என்று ராமதாஸ் கூறியுள்ளார்.