பெரியார் குறித்த கருத்து: ரஜினி மீதான புகார்; சென்னை காவல் ஆணையர்பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

ரஜினிகாந்த்: கோப்புப்படம்
ரஜினிகாந்த்: கோப்புப்படம்
Updated on
1 min read

பெரியார் பற்றிய கருத்து தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் மீது திராவிடர் விடுதலை கழகம் அளித்த புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து சென்னை காவல் ஆணையர், திருவல்லிக்கேணி காவல் ஆய்வாளர் ஆகியோர் பதிலளிக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜனவரி 14-ம் தேதி சென்னையில் நடைபெற்ற துக்ளக் இதழின் ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971 ஆம் ஆண்டு சேலத்தில் பெரியார் நடத்திய பேரணி ஒன்றில் ராமன், சீதை ஆகியோரின் நிர்வாண உருவங்களை எடுத்துச் சென்றதாகவும், செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்ததாகவும் பேசினார்.

பெரியார் பற்றி பொய்யான தகவலை பரப்பி பெரியாரின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தியடன், பொது அமைதியை குலைக்கும் வகையிலும் நடிகர் ரஜினிகாந்த் பேசி உள்ளதால், அவர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க திராவிட விடுதலை கழகம் சார்பில் சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில், சென்னை மாவட்ட தலைவர் உமாபதி ஜனவரி 18 ஆம் தேதி புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி சென்னை எழும்பூர் 2-வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் உமாபதி மனுத்தாக்கல் செய்தார்.

அந்த மனு நீதிபதி ரோஸ்லின் துரை முன்னிலையில் இன்று (மார்ச் 4) விசாரணைக்கு வந்தபோது, ரஜினிகாந்த் மீது திராவிடர் விடுதலை கழகம் அளித்த புகார் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து சென்னை காவல் ஆணையர், திருவல்லிக்கேணி காவல் ஆய்வாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை மார்ச் 7 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in