

குடிமராமத்துத் திட்டம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிந்து பேச வேண்டும் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ரூ.565 கோடியில் அமையவுள்ளமேட்டூர் - சரபங்கா நீரேற்ற திட்டத்துக்கு, இன்று (மார்ச் 4) காலை சேலம் மாவட்டம், எடப்பாடி, இருப்பாளி ஊராட்சியில் உள்ள மேட்டுப்பட்டி ஏரி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்சியில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:
"ரூ.565 கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இன்னும் 11 மாதங்களில் இத்திட்டம் முடிக்கப்பட்டு, 12-வது மாதம் வரும்போது இந்த மேட்டுப்பட்டி ஏரி நிரம்பியிருக்கும். வேளாண் பணிகள் சிறக்கும். குடிநீர் பிரச்சினைகள் தீர்க்கப்படும். சுற்றியுள்ள 100 ஏரிகளில் தண்ணீர் நிரப்பப்படும்.
சொன்னதை செய்யும் ஒரே அரசு இந்த அரசு தான். திட்டத்தை அறிவித்துவிட்டு மக்களை ஏமாற்றும் அரசு எங்கள் அரசு அல்ல. ஜெயலலிதா தொடங்கிய திட்டங்களை சிந்தாமல் சிதறாமல் மக்களிடத்தில் கொண்டு சென்று சேர்க்கிறோம். கிராமப்புற மக்கள் மேம்பாடு அடைய நீர் மேலாண்மை திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என ஜெயலலிதா சொன்னார். துரதிருஷ்டவசமாக அவர் மறைந்துவிட்டார். ஜெயலலிதாவின் மனதில் துளிர்த்த திட்டங்களை இந்த அரசு நிறைவேற்றி வருகிறது.
நீர் மேலாண்மைக்காக 5 ஓய்வு பெற்ற பொறியாளர்கள், 2 தலைமை பொறியாளர்கள் அடங்கிய குழு அமைத்தோம். அக்குழுவினருடன் நான் பலமுறை நடத்திய ஆலோசனைக் கூட்டங்களின் விளைவாக இத்திட்டம் வகுக்கப்பட்டது.
குடிமராமத்துத் திட்டத்துக்காக ஆரம்ப நிதியாக ரூ.100 கோடி ஒதுக்கினோம். அதில், 1,519 ஏரிகளை முதல்கட்டமாக தேர்வு செய்தோம். அவற்றுள் 1,513 ஏரிகளில் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இரண்டாவது கட்டமாக 369 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதில், 1,511 ஏரிகள் தேர்வு செய்யப்பட்டு 1,439 ஏரிகளுக்கான பணிகள் நிறைவு பெற்றிருக்கின்றன. மூன்றாவது கட்டமாக ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டது. இதில், 1,819 ஏரிகள் தேர்வு செய்யப்பட்டு 949 பணிகள் நிறைவு பெற்றன.
குடிமராமத்துத் திட்டம் முழுக்க முழுக்க விவசாயிகள் மூலம் நடைபெறுகிறது. ஏரிகளில் அள்ளப்படும் மண் அவர்களின் விவசாய நிலங்களுக்கு இயற்கை உரமாகிறது. ஆனால், இதில் முறைகேடுகள் நடைபெறுவதாக தவறான, பொய்யான செய்தியை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறிவருகிறார்.
இதனை வன்மையாக கண்டிக்கிறோம். அதனால், ஸ்டாலின், தெரிந்தால் பேசுங்கள், தயவுசெய்து விவசாயிகளை குறை கூறாதீர்கள். எதிர்கட்சியினர் வாய்ச்சொல் வீரர்கள். நாங்கள் செயல்களில் காட்டிக்கொண்டு இருக்கிறோம். அதனால் தான் எதிர்க்கட்சியினர் ஏதும் பேச முடியாமல் தடுமாறுகின்றனர். எவ்வளவு குற்றச்சாட்டுகள் சொன்னாலும் கவலையில்லை. மடியிலே கனமில்லை, அதனால் வழியில் பயமில்லை"
இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.